Published : 29 Jan 2023 05:04 AM
Last Updated : 29 Jan 2023 05:04 AM

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் - 48 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 48வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

திரிபுராவில் கடந்த தேர்தலில் 36 இடங்களில் வென்று பாஜக ஆட்சியை பிடித்தது. வரும் தேர்தலில் இங்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் திரிபுரா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 11 பெண்கள் உள்ளிட்ட 48 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.

இதன்படி தற்போதைய அமைச்சர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்களில் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் எதையும் அக்கட்சி தெரிவிக்கவில்லை.

முதல்வர் தொகுதி: முதல்வர் மாணிக் சாகா, போர்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் அவரது சொந்தத் தொகுதியான தான்பூரின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் இவர் இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் அப்போதைய முதல்வருமான மாணிக் சர்க்காரிடம் தோல்வி அடைந்தார். என்றாலும் மாணிக் சர்க்கார் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

பாஜகவில் நேற்று முன்தினம் இணைந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மொபோஷர் அலி, கைலாஷகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

10 தனி தொகுதி: அகர்தலா, சூர்யமணிநகர் மற்றும் 10 தனி (எஸ்டி) தொகுதிகளுக்கு பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திப்ரா மோத்தா, ஐபிஎஃப்டி உள்ளிட்ட பழங்குடியினர் கட்சிகளு டன் தேர்தல் உடன்பாடு ஏற்படலாம் என்று பாஜக நம்புகிறது. இக்கட்சி களுக்காக 10 தனி தொகுதிகளை பாஜக வைத்துள்ளது. கூட்டணி உடன்பாடு ஏற்படாவிட்டால் இத்தொகுதிகளுக்கும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கும் என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

திரிபுராவில் கடந்த 2018-ல்பாஜக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. இதன்மூலம் அங்கு 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. இம்முறை மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் திரிபுரா தேர்தலுக்கான 17 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக, மார்க்சிஸ்ட் கூட்டணி தவிர திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களம் காண்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x