Published : 24 Jan 2023 06:32 AM
Last Updated : 24 Jan 2023 06:32 AM

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் இணைந்தது

மும்பை கடற்படைத் தளத்தில் ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கியை கடற்படை தளபதி ஹரிகுமார் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.படம்: பிடிஐ

மும்பை: ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. கடற்படை தளபதி ஹரிகுமார் இந்த நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

சர்வதேச அளவில் அதிக நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட நாடாக சீனா முன்னணியில் உள்ளது. அந்த நாட்டின் கடற்படையில் 74 நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்காவிடம் 69, ரஷ்யாவிடம் 66, ஜப்பான், தென்கொரியாவிடம் தலா 22 நீர்மூழ்கிகள் உள்ளன.

இந்தியாவிடம் தற்போது 17 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இந்திய கடற்படையில் நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரூ.50,000 கோடி மதிப்பில்..: பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து ரூ.50,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டுமான தளத்தில் நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கடந்த 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி,கடந்த 2021-ம் ஆண்டில் ஐஎன்எஸ்கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகி யவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.

இந்த வரிசையில் ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. மும்பைகடற்படை தளத்தில் நடந்த விழாவில் கடற்படை தளபதி ஹரிகுமார்இந்த நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப் பணித்து வைத்தார். அவர் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளில் 3 நீர்மூழ்கிகள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவின் கப்பல் கட்டும் திறன் உலகுக்கு பறைசாற்றப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

புதிய நீர்மூழ்கி குறித்து கடற்படை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:

புராஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கல்வாரி கிளாஸ் என்ற பெயரில் பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் 6 நீர்மூழ்கிகள் தயாரிக்கப்படுகிறது. இதில் 5-வது நீர்மூழ்கியான வகிர்கடற்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நீர்மூழ்கி 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இதுடீசல் - மின்சாரத்தில் இயங்கும்.

கடலின் மேற்புறத்தில் 20 கி.மீ. வேகத்திலும் கடலுக்கு அடியில் 40 கி.மீ. வேகத்திலும் செல்லும். கடலுக்கு அடியில் இருந்து நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகள், போர்க்கப்பல்களை தகர்க்கும் ஏவுகணைகள், கடலுக்கு அடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் உள்ளிட்ட நாசகார ஆயுதங்கள் நீர்மூழ்கியில் உள்ளன.

எதிர்காலத்தில் இந்தியாவின் அதிவேக ஏவுகணையான பிரம் மோஸ், நாசகார ஏவுகணையான வருணாஸ்திரா ஆகியவற்றையும் நீர்மூழ்கியில் பொருத்த திட்டமிட்டு உள்ளோம். எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் ஐஎன்எஸ் வகிரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

கல்வாரி நீர்மூழ்கி ரகத்தில் மேலும் 6 நீர்மூழ்கிகளை தயாரிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் ஜெர்மனி தயாரிப்பான 209 ரகத்தை சேர்ந்த 8 நீர்மூழ்கிகள் இருந்தன. இதில் 2 நீர்மூழ்கிகள் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கல்வாரி ரக நீர்மூழ்கிகள் முழுமையாக கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு ஜெர்மனியின் பழைய நீர்மூழ்கிகள் நீக்கப்படும். இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு மைல் கல்: பிரான்ஸின் நேவல் குரூப்நி றுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய, பிரான்ஸ் கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்மூழ்கி இந்தியகடற்படையில் சேர்க்கப்பட்டி ருப்பது ஒரு மைல் கல் ஆகும்.

இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரித்த பல்வேறு சாதனங்கள் வகிர் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நீர்மூழ்கியில் அதிநவீன ஏவுகணைகளை ஏவும் 6 குழாய்கள் உள்ளன. 18 ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x