Published : 08 Dec 2016 08:05 PM
Last Updated : 08 Dec 2016 08:05 PM

பத்மநாப சுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார் அணிந்து வரக்கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள், சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் போன்ற உடைகளை அணிய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் உண்டு.

ஆண்கள் தூய வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிய வேண்டும். பெண்கள் சேலை அணிந்திருக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள், கவுன் அணிய வேண்டும். வேறு உடை அணிந்த பெண்கள், ‘முண்டு’ எனப்படும் வேட்டி போன்ற அங்கியை மேலணிந்த பிறகே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போதைய நாகரிக சூழலில், சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் ஆடைகள், பெண்களின் பொதுவான மற்றும் கண்ணியமான உடையாக கருதப்படுகிறது. எனவே, ஜீன்ஸ் டைட்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, சுடிதார் அணிந்து வர பெண்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதன் அடிப்படையில், கோயிலில் உடைக் கட்டுப்பாடுகளை தளர்த்திய கோயில் நிர்வாகம், பத்மநாப சுவாமி கோயிலுக்குள் பெண்கள் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வரலாம் என அறிவித்தது. கடந்த 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதற்கு கோயில் தந்திரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரியா ராஜி, கோயில் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் உடை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் எனக் கோரிய ரியா ராஜியின் மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வர அனுமதி அளிக்கக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x