Published : 18 Jan 2023 11:30 AM
Last Updated : 18 Jan 2023 11:30 AM

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விலகல்: ராகுல் யாத்திரைக்கு முன் திடீர் முடிவு

பிரதிநிதித்துவப்படம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர்நாத் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் லால் சிங் யாத்திரையில் பங்கேற்க அனுமதி அளித்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இந்த வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் நுழைய இருக்கிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர்நாத் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கும் சே லால் சிங்-ன் முன்மொழிவை ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். லால் சிங், கடந்த 2018ம் ஆண்டு கத்துவா வன்புணர்வு வழக்கு குற்றவாளிகளை வெட்கமின்றி பாதுகாத்தார்.

அவர்களைப் பாதுகாப்பதற்காக லால் சிங், மொத்த ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் அவர் பிரிவினை வேலையைச் செய்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் நோக்கம் பிரிவினைக்கு எதிரானது. இந்த கருத்தின் அடிப்படையில் என்னால் பிரிவினைவாதிகளுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை எம்பியாகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த லால் சிங், கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். தொர்ந்து பிடிபி- பாஜக கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்தார்.இந்த கூட்டணி ஜூன் 2018ம் ஆண்டு முறிந்தது.

கூட்டணி முறிவதற்கு பல மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து லால் சிங் வெளியேறினார். டோக்ரா ஸ்வபிமான் சங்கதன் கட்சியுடன் இணைந்து, கத்துவா வன்புணர்வாளர்களை பாதுகாக்க 2018 ஜனவரியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். "அப்போது இருந்த நிலைமையை தணிக்கவே தான் பேரணியில் பங்கேற்றதாக லால் சிங் அப்போது தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞரான தீபிகா புஷ்கர் நாத், கத்துவா வன்புணர்வில் பாதிக்கப்பட்ட நாடோடி சிறுமியின் பெற்றோரை வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக ஜம்மு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதேபோல், வழக்கை பஞ்சாப்பில் உள்ள பதான்கோட்-க்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட அவர்களுக்கு வழிகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ரஜ்னி பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை உடைய எல்லோரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கலாம் என்றார்.

தொடர்ந்து லால் சிங் யாத்திரையில் பங்கேற்பது பாதிப்பை உருவாக்குமா என்று கேட்டதற்கு பதில் அளித்த பாட்டீல்," நாங்கள் எங்கள் தலைவரின் யாத்திரையில் முழு கவனம் செலுத்துகிறோம். ராகுல் காந்தி பல்வேறு சாதி, மதங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை குறைக்கிறார் என்று லால் சிங் நம்பினால் அவர் யாத்திரையில் பங்கேற்கலாம். ஜனவரி 30 ஆம் தேதி லால் சவுக்கில் யாத்திரை முடிவடையும் போது ராகுல் காந்தி அங்கு மூவர்ணக்கொடியை ஏற்றுவார் அந்த கொடி எங்கள் கட்சி அலுவலகத்தில் எப்போதும் பறந்து கொண்டே இருக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x