Last Updated : 01 Dec, 2016 10:56 AM

 

Published : 01 Dec 2016 10:56 AM
Last Updated : 01 Dec 2016 10:56 AM

தமிழக புராதனச் சின்னங்களை பராமரிக்க 3 ஆண்டுகளில் 44 சதவீத செலவு குறைவு: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்

தமிழகத்தில் புராதனச் சின்னங்கள் பராமரிக்கும் செலவு கடந்த 3 ஆண்டுகளில் 44.25 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் எழுப்பிய கேள்விக்கான பதிலில் அமைச்சர் இதை தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் (ஏஎஸ்ஐ) பராமரிப்பில் உள்ள புராதனச் சின்னங்களில் 7 இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாமல்லபுரம் சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை, கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் ஜைனர் கற்கோயில், சித்தன்னவாசல் குகை கல்வெட்டுகள், திருமயம் கோட்டை ஆகியவை இந்த 7 இடங்கள் ஆகும். இவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் ஏஎஸ்ஐ பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. இந்தத் தொகை கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று அளித்த பதிலில், 2013-14-ல் ரூ. 1 கோடியே 65 லட்சத்து 81,156-ம் 2014-15-ல் ரூ.1 கோடியே 56 லட்சத்து 84,750-ம் 2015-16-ல் ரூ.92 லட்சத்து 18,641-ம் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் சித்தன்ன வாசல் குகைக்கோயில் கல்வெட்டு களுக்கு கடந்த நிதியாண்டில் மிகக் குறைந்த அளவாக ரூ. 2,458 செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தையை இரு நிதியாண்டு களில் ஒரு பைசா கூட செலவிடப் படவில்லை. மற்றவற்றில் ஐந்து இடங்களுக்கு பராமரிப்பு செலவு படிப்படியாக குறைந்துள்ளது. திருமயம் கோட்டைக்கு மட்டும் 2013-14-ல் ரூ.22,86,743; 2014-15-ல் ரூ.23,59,888; 2015-16-ல் ரூ.26,21,791 என 3 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.

இந்த விவரம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் புராதனச் சின்னங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் கேட்ட துணைக் கேள்விக்கு அமைச்சர் மகேஷ் சர்மா, தமிழகத்தில் மொத்தம் 413 புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்மேடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பராமரிப்பு தொகை குறித்த விவரங்களை அமைச்சர் அளிக்கவில்லை. இதை வெளியிட்டால் பராமரிப்பு செலவு மேலும் குறைந்து வருவது தெரியவரும் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பான மற்றொரு கேள்விக்கு தமிழகத்தின் ஏழு புராதனச் சின்னங்களில் வசூலாகும் நுழைவுக் கட்டண விவரங்களை அமைச்சர் அளித்துள்ளார். இந்தத் தொகை 2015-16-ல் ரூ. 2,87,84,300; 2014-15-ல் ரூ. 2,91,18,565; 2013-14-ல் ரூ.2,96,53,365 வசூலாகி உள்ளது. இந்த 3 நிதியாண்டுகளில் 2015-16-ல் நுழைவுக் கட்டண வசூல் ரூ.8,69,065 குறைந்துள்ளது. இதற்கு சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளமே காரணம் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x