Published : 11 Jan 2023 03:03 PM
Last Updated : 11 Jan 2023 03:03 PM

பிஹார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

உச்சநீதிமன்றம் | கோப்புப் படம்

புதுடெல்லி: பிஹாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், அவசர வழக்குகளாக வரும் 20-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அகிலேஷ் குமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ''பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்கும் மாநில அரசின் அறிவிப்பாணை சட்டவிரோதமானது, விசாரணைக்கு உரியது, பிற்போக்குத்தனமானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகார் துணை முதல்வர் விளக்கம்: இதனிடையே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “இது சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல; சாதிவாரியான சர்வே. மக்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை இது அளிக்கும். இந்தக் கணக்கெடுப்பு தவறு என்றால், இந்துக்கள், முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி, விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்புகளும் தவறுதான். இந்தக் கணக்கெடுப்புக்கான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜகவும் இதனை ஆதரித்துள்ளது. அந்த அடிப்படையில்தான் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

பிஹார் முதல்வரின் பேச்சு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல்வர் நிதிஷ் குமார் தலைநகர் பாட்னாவில் இதனை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இது உதவும். கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்ததும் அந்த தகவல்கள் மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு சாதியிலும் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரம் இதன் மூலம் திரட்டப்படும். இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் கணக்கெடுப்பு: மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சமூகத்தினர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பிற சாதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை. இந்நிலையில், பிஹாரில் முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x