Published : 11 Jan 2023 10:14 AM
Last Updated : 11 Jan 2023 10:14 AM

தன்பாலின உறவாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

மோகன் பாகவத் | கோப்புப் படம்.

நாக்பூர்: தன்பாலின உறவாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யாவிற்கு அவர் அளித்தப் பேட்டியில் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

அவருடைய பேட்டியில், "தன்பாலின ஈர்ப்பு கொண்ட மக்கள் எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளனர். மனிதகுலம் தோன்றியதிலிருந்தே இருந்திருக்கின்றனர். இது உயிரியல் ரீதியானது. இது ஒரு வாழ்வியல் முறை. அதனால் தன்பாலின உறவாளர்களுக்கு அவர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரத்தை சமூகம் வழங்க வேண்டும். அவர்களும் சமூகத்தின் அங்கமே என்று உணர வாய்ப்பளிக்க வேண்டும். இது மிகவும் எளிதான சிக்கல். இந்த உறவாளர்கள் மீதான பார்வையை நேர்மறையானதாக முன்னெடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். வேறு எந்த வழியிலும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பயனற்றதாகவே இருக்கும்.

இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக போரை சந்தித்து வருகிறது. இந்தப் போர் அந்நிய படையெடுப்புகள் மூலம் ஏற்பட்ட அத்துமீறல், அந்நிய சித்தாந்தங்களின் தாக்கங்கள், வெளிநாட்டு சதி ஆகியனவற்றிற்கு எதிரானதாக இருந்திருக்கிறது. சங் பரிவாரம் இந்தப் போரில் தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளது. இதைப் பற்றி நிறையபேர் பேசியுள்ளனர். இதனால் தான் இந்து சமுதாயம் விழித்துக் கொண்டது. ஆகையால் போரில் இருப்பவர்கள் சற்றே மூர்க்கத்தனமாக இருப்பதும் இயல்பே. இந்தியா எப்போதுமே அகண்ட பாரதமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்தியா தனது இந்து உணர்வை மறந்தபோதெல்லாம் பிரித்தாளப்பட்டுள்ளது. இந்து என்பது நமது அடையாளம், நமது பண்பாட்டு அம்சம், நமது தேசியம். இந்துக்கள் என்றுமே நாங்கள் சொல்வது மட்டுமே சரி என்று சொல்வதில்லை. நீங்கள் உங்கள் கருத்தில் உள்ளீர்கள். நாங்கள் எங்கள் கருத்தில் சரியாக இருக்கிறோம். இதில் சண்டை எதற்கு. ஒன்றாக இணைந்தே செல்வோம் என்பதுதான் இந்துக்களின் பார்வை" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x