Published : 11 Jan 2023 04:02 AM
Last Updated : 11 Jan 2023 04:02 AM

நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரச்சினை என்பதால் மதமாற்றத்துக்கு அரசியல் சாயம் வேண்டாம் - உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதமாற்றம் என்பது நாடு முழுவதும் உள்ள முக்கியமான பிரச்சினை என்பதால், அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் குறித்தும், சலுகைகள், உதவிகள் அளித்து மதமாற்றம் நடைபெற்றால், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் முறைகேடான மதமாற்றங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் மனு தாக்கல் செய்தார்.

‘நாடு முழுவதும் மதமாற்ற சம்பவங்கள் வாரம்தோறும் நடைபெறுகின்றன. மிரட்டி, அச்சுறுத்தி, பரிசுகள், உதவிகள் வழங்குவதாக ஆசைகாட்டி, மாய மந்திரங்கள், மூடநம்பிக்கைகள் மூலம் ஏமாற்றி என பல வழிகளில் மதமாற்றம் நடக்கிறது. ஒரு மாவட்டம்கூட விடுபடாமல், நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற பிரச்சினை உள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரியது. இதை உடனே கட்டுப்படுத்த வேண்டும்’ என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அமர்வில் இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: கட்டாய மதமாற்றம் என்பது நாட்டு நலனை பாதிக்கக்கூடியது. இதை தீவிர பிரச்சினையாக அரசு கருதுகிறது. அறக்கட்டளைகளின் நோக்கம் மதமாற்றமாக இருக்க கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

நீதிபதிகள்: மத சுதந்திர உரிமைக்கும், மதமாற்ற உரிமைக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்) வெங்கட்ரமணியின் உதவி நீதிமன்றத்துக்கு தேவைப்படுகிறது. கட்டாய மதமாற்றம் குறித்தும், சலுகைகள், உதவிகள் அளித்து மதமாற்றம் நடைபெற்றால், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நீதிமன்றத்துக்கு அவர் தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்தவக்கீல் வில்சன்: இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய மனு. தமிழகத்தில் இதுபோன்ற மதமாற்றங்கள் இல்லை. இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதை சட்டப்பேரவையிடம் விட்டுவிட வேண்டும். மனுதாரருக்கு அரசியல் தொடர்பு உள்ளது. அவருக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு வாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:

இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் மாநிலத்தில் இதுபோன்ற மதமாற்றம் நடக்காவிட்டால் நல்லது. நடந்தால், அது மோசமான சூழல். ஒரு மாநிலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை பார்க்க வேண்டாம். நாங்கள் ஒட்டுமொத்த நாட்டைப் பற்றி கவலைப்படுகிறோம். நீதிமன்ற நடைமுறையை வேறு விஷயத்துக்கு மாற்றாதீர்கள். இதில் அரசியலை கொண்டுவந்து அரசியல் சாயம் பூச வேண்டாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கில் அடுத்த விசாரணை பிப்.7-ம் தேதி நடக்க உள்ளது. முறைகேடான மதமாற்றம் முக்கிய பிரச்சினை என்பதால், மனுதாரரின் வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் அப்போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

‘கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். மக்களின் மத சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

‘மிக தீவிரமான இப்பிரச்சினையை சமாளிக்க உண்மையான முயற்சியும், நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்’ என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. வஞ்சித்தல், தூண்டுதல், மிரட்டுதல் மூலமான மதமாற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், மிக சிக்கலான சூழல் உருவாகும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதமாற்றம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது, குஜராத் அரசு, ‘மத சுதந்திரத்தில் மதமாற்றத்துக்கான உரிமை இல்லை. எனவே, திருமணம் மூலமாக நடைபெறும் மதமாற்றத்துக்கு மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி கட்டாயம் என்ற மாநில அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x