Last Updated : 25 Dec, 2016 01:27 PM

 

Published : 25 Dec 2016 01:27 PM
Last Updated : 25 Dec 2016 01:27 PM

மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடி செலவில் நினைவிடம்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு ரூ.3,600 கோடி செலவில் நினைவிடம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னரான சிவாஜிக்கு சிவசேனா கட்சி மரபுரிமை கொண்டாடி வருகிறது. மேலும் மும்பை மாநகராட்சிக்கு சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவாஜிக்கு ரூ.3,600 கோடி செலவில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்ட பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

தெற்கு மும்பை கடற்கரைப் பகுதியில் அமைய உள்ள இந்த நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நினைவிடம் உலகின் மிக உயரமான கட்டிடமாக அமையும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிவாஜி குதிரை சவாரி செய்வது போல 192 மீட்டர் உயர சிலை வைக்கப்பட உள்ளது. கலை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், கண்காட்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அமைய உள்ளன.

முன்னதாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மண் மற்றும் ஆற்று நீர் அடங்கிய கலசத்தை முதல்வர் பட்னாவிஸ் பிரதமர் மோடியிடம் வழங்கினார். பின்னர் இவர்கள் கிர்காம் சவ்பட்டி கடற்கரையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நினைவிடம் அமையவுள்ள அந்தப் பகுதிக்கு மிதவை படகில் பயணம் செய்தனர். அங்கு சென்றதும் பூஜை செய்த பிறகு அந்த கலசத்தை மோடி கடலில் கொட்டினார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பணமதிப்பு நீக்கம் உட்பட மத்திய அரசின் பல முடிவுகளை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் இந்நிகழ்ச்சியின் இடையே, பிரதமர் மோடி, தாக்கரேவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

முன்னதாக, அரசியல் லாபத்துக் காக சிவாஜி நினைவிடம் கட்ட பாஜக அரசு முடிவு செய்திருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் அம்பேத்கர் நினைவிடம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடிக்கு அருகில் இருக்கை ஒதுக்கவில்லை எனக் கூறி இவ் விழாவை தாக்கரே புறக்கணித்தார்.

எதிர்ப்பு

இந்த நினைவிடம் அமைப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்று மீனவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பதுக்கியவர்களுக்கு பிரச்சினை

சிவாஜி நினைவிட அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு பாந்த்ரா குர்லா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசும் போது, “பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் நாட்டில் உள்ள 125 கோடி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். வரும் 30-ம் தேதிக்குப் பிறகு பொதுமக்களின் சிரமம் குறையும். அதேநேரம் கறுப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு பிரச்சினை அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் வரை கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான போர் ஓயாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x