Published : 03 Jan 2023 01:55 PM
Last Updated : 03 Jan 2023 01:55 PM

ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம்

பிரதிநிதித்துவப்படம்

பாரதீப்: ஒடிசாவில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மற்றொருவரின் உடல், கப்பல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்றாவது நபர் இறந்துள்ளதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.

வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கி எம்.பி அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் வழியில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அந்தக் கப்பலில் பணியாளர் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இறந்தவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதான மில்யாகோவ் செர்கேய் என்பது தெரிய வந்துள்ளது. இவர் அந்தக் கப்பலில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மில்யாகோவ் இறந்த தகவலை பாரதீப் துறைமுகக் கழகத்தின் தலைவர் பி.எல்.ஹரனாத் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "அந்தக் கப்பலின் தலைவர், தங்கள் கப்பலின் தலைமைப் பொறியாளர் நெஞ்சுவலி காரணமாக இறந்ததுவிட்டதாக தகவல் தெரிவித்தார். இறந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

முன்னதாக, தெற்கு ஒடிசாவில் உள்ள ராயகடா நகரில் ரஷ்யாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி உட்பட இரண்டு ரஷ்ய சுற்றுலா பயணிகள் மர்மான முறையில் உயிரிழந்தனர். ரஷ்யாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், மக்கள் பிரதிநிதியுமான 61 வயது பவெல் டிசம்பர் 25-ம் தேதி, தான் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது நண்பர் விளாடிமிர் புதானோவ் தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த இரண்டு மரணங்கள் தொடர்பாக ஒடிசா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x