Published : 28 Dec 2022 01:06 PM
Last Updated : 28 Dec 2022 01:06 PM

வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு - விமான சேவை கடும் பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ''புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன'' என புதுடெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ஆண்டின் கடைசி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை விமான நிலையங்களில் அதிகமாக இருக்கும் என்றும், தற்போதும் சுற்றுலாப் பயணிகள் விமானப் பயணங்களுக்கு அதிக அளவில் பதிவு செய்துள்ளதாகவும் எனினும், பனிப்பொழிவு காரணமாக பலரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

பனிப்பொழிவு இருக்கும் சமயங்களில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க CAT-111 என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள விமானங்கள் மட்டும் பனிப்பொழிவு சமயத்திலும் தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன. பல விமானங்களில் இத்தகைய கருவி இல்லாததும் அவை தரையிறங்க அனுமதிக்கப்படாததற்கு மற்றொரு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பயணிகள் விமானங்களை பதிவு செய்வதற்கு முன்பாக தாங்கள் பதிவு செய்யும் விமானத்தில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே, விமானங்களை தாமதமாக தரையிறக்க நேர்ந்ததற்காக விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x