Published : 22 Dec 2022 09:22 PM
Last Updated : 22 Dec 2022 09:22 PM

கரோனா அலர்ட் | பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம்: பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் முகக்கவசத்துடன் பிரதமர் மோடி

புதுடெல்லி: சீனாவில் நிலவிவரும் கரோனா தொற்று பரவல் உலக அளவில் மீண்டும் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

நோய்த்தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள், அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இது குறித்த பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு: உலகளவிலான கரோனா நிலவரம் இந்தக் கூட்டத்தில் விரிவாக வழங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவது குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது.

கரோனா தொற்றுப் பரவல் முற்றுப் பெறாத காரணத்தால் தீவிர விழிப்புணர்வு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர் போன்ற கரோனா கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியம் என மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார். இந்த மாதிரிகளை தினந்தோறும் அனுப்புவதன் மூலம் புதிய திரிபு பாதிப்பு இருந்தால் சரியான நேரத்தில் தக்க நடவடிக்கைகள் எடுக்க உதவும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x