Published : 19 Dec 2022 04:19 PM
Last Updated : 19 Dec 2022 04:19 PM

மாநில, தேசிய அளவில் மருத்துவத் தீர்ப்பாயங்கள்: மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: "மருத்துவக் குற்றங்கள், அதன் தன்மைகள் குறித்து தேவையான அளவுக்கு நிபுணத்துவம் கொண்டவர்கள் தலைமையில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தீர்ப்பாயங்களை அமைத்து பாதிக்கப்படவர்களுக்கு விரைவான நியாயமான தீர்வு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தின் போது திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு பேசியது: "அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 323, நிர்வாகத் தீர்ப்பாயங்கள் மற்றும் பிற தீர்ப்பாயங்கள் அமைப்பதுபற்றி விரிவாக விவரிக்கிறது. இதன்படி இந்தியாவில் பல தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஆனால் மருத்துவ உலகில், குறிப்பாக மருத்துவமனைகளில் தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் தவறுகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயம் இல்லாதது வியப்பானதும் வேதனையானதுமாகும்.

இப்போது மருத்துவப் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது. அங்கு போதிய மருத்துவ நிபுணத்துவம் இல்லாத நிலையில் வழங்கப்படும் தீர்ப்புகளால் பல நேரங்களில் டாக்டர்களும், நோயாளிகளும் என இரு தரப்பும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற நிரந்தர மருத்துவ தீர்ப்பாயம் ஒன்றை தேசிய அளவிலும், மாநிலங்கள் தோறும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவத் துறைக்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்படும் தீர்ப்பாயங்களால், தேவையற்ற பிரச்சினைகள், கால விரயங்கள் தவிர்க்கப்படும். மாநிலத் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து தேசிய அளவிலான தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யவும், இறுதியாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகவும் வழிவகை இருக்கும்படி இத்தகைய தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டியது டாக்டர்களின் கடமை. அதில் தவறுகள் நடந்து, நோயாளிகள் பாதிக்கப்பட்டாலோ அவர்களது உயிர் பறிபோனாலோ, இந்திய தண்டனைச் சட்டம் அந்த டாக்டரை குற்றவாளியாகக் கருதுகிறது. ஆனால் பெரும்பாலான் நேரங்களில் டாக்டர்கள் செய்யும் தவறுகளுக்கான வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் நடத்தப்படுகின்றன.

இப்படி நுகர்வோர் நீதிமன்றங்களில் நடகும் வழக்குகள் பல ஆண்டுகள் வரை நீடிப்பதால் டாக்டர்களும் நோயாளிகளும் மிகுந்த வேதனைக்கும், சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள். குறிப்பாக, வழக்கு நடந்து முடியும் வரை சம்பந்தப்பட்ட டாக்டர், மன அழுத்தத்தால் தன் கடமையை சரிவர செய்யமுடிவதில்லை. அவரது மருத்துவமனையின் செயல்பாடும் கிட்டத்தட்ட முடங்கும் நிலை ஏற்படுகிறது. நோயாளிகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

பல ஆண்டுகள் வழக்கு நடந்து நஷ்ட ஈடாக ஒரு தொகை வழங்கப்படும்போது, அது நோயாளிகளுக்கு போதுமான திருப்தியையும் தருவதில்லை. எனவேதான், இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைக்கக் கோருகிறேன்.அதுதவிர, நுகர்வோர் நீதிமன்றங்களில் மருத்துவ நிபுணத்துவம் கொண்ட உறுப்பினர் இல்லாததால், டாக்டருக்கோ அல்லது நோயாளிக்கோ ஒருதலைபட்சமான தீர்ப்பு பல நேரங்களில் வழங்கும் நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டுமே நீதியற்ற நடவடிக்கையாகவே அமையும்.

பெரும்பாலான டாக்டர்கள், தனிப்பட்ட முறையில் சிறிய அளவில் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பவர்களாக இருக்கும்போது, பல நேரங்களில் நுகர்வோர் நீதிமன்றங்களால் அறிவிக்கப்படும் நஷ்ட ஈட்டுத்தொகையை அவர்களால் செலுத்த முடிவதில்லை. டாக்டர்கள் தரப்பு சூழல் மற்றும் நியாயங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் நுகர்வோர் நீதிமன்றங்களில் உறுப்பினர்கள் இல்லை என்பதால்தான் இந்த நிலை. இத்தகைய பொருத்தமற்ற தீர்ப்புகள் அந்த டாக்டரின் மருத்துவ வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது.

எனவே, மருத்துவ குற்றங்கள், அதன் தன்மைகள் குறித்து தேவையான அளவுக்கு நிபுணத்துவம் கொண்டவர்கள் தலைமையில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் தீர்ப்பாயங்களை அமைத்து பாதிக்கப்படவர்களுக்கு விரைவான நியாயமான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x