Published : 19 Dec 2022 07:17 AM
Last Updated : 19 Dec 2022 07:17 AM

வளர்ச்சிக்கான தடைகளை தகர்த்துள்ளோம்: வடகிழக்கு கவுன்சில் பொன்விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி | படம்: ட்விட்டர்

ஷில்லாங்: தேசத்தின் வளர்ச்சிக்கான தடைகளைத் தகர்த்துள்ளோம். அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

ஊழல், பாகுபாடு, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நேர்மையான வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான இவை ஆழமாக வேரூன்றி உள்ளன. இந்த வேரை அடியோடு பிடுங்கி எறிவதில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது கால்பந்தாட்ட காய்ச்சல் நம் அனைவரையும் வாட்டி வருகிறது. அதன் பாணியில் சொல்ல வேண்டுமானால், கால்பந்தாட்டப் போட்டியில் விதிமுறைகளை மீறி, தவறாக நடக்கும் விளையாட்டு வீரருக்கு எதிராக சிவப்பு அட்டை (ரெட் கார்டு) காண்பிக்கப்பட்டு, அவர் களத்துக்கு வெளியே அனுப்பப்படுவார். அதேபோலத்தான், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் `ரெட் கார்டு' போட்டுள்ளோம். இதன் மூலம், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது. தேசத்தின் வளர்ச்சிக்கான தடைகளைத் தகர்த்துள்ளோம். இதன் நேர்மறையான தாக்கம், நாடு முழுவதும் காணப்படுகிறது.

இந்த ஆண்டு நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. எட்டுஆண்டுகளுக்கு முன்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஷில்லாங்கில் ரூ.2,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு சேவை இணைப்புகளை வலுப்படுத்தும் வகையில் 4-ஜி டவர்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மொத்தம் 320 டவர்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 890 4-ஜி டவர்களுக்கான பணிகள் கட்டுமானத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு கவுன்சில் (என்இசி) என்பது அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய 9 மாநிலங்களை உள்ளடக்கிய, வடகிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியை நிலைநாட்டிய மோடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் 50 முறை வடகிழக்குப் பிராந்தியங்களுக்கு பிரதமர் மோடி வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

முன்னொரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்துக்குப் பெயர் பெற்றவையாக இருந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில், இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

கிளர்ச்சி சம்பவங்கள் 70 சதவீதம், பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதல்கள் 60 சதவீதம், பொதுமக்கள் உயிரிழப்பு 89 சதவீதமாக குறைந்துள்ளன.

வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைதியை நிலை நாட்டியுள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x