Last Updated : 09 Dec, 2016 01:59 PM

 

Published : 09 Dec 2016 01:59 PM
Last Updated : 09 Dec 2016 01:59 PM

என்னை பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும்: நோட்டு நடவடிக்கையை எதிர்த்து ராகுல் ஆவேசம்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தன்னை பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஊழல். நான் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கிறேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். நான் அவ்வாறு பேசும்போது பிரதமர் மோடியால் அவையால் அமர்ந்திருக்கக் கூட முடியாது.

பண மதிப்பு நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும் பிரதமர் மோடி மக்களவையில் ஏன் அது தொடர்பாக பேச மறுக்கிறார். அவரது பதற்றத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையே இந்தியாவின் மிகப் பெரிய ஊழல். ஏனெனில், இந்த நடவடிக்கையை அறிவித்தபோது இது கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்றனர். பின்னர் இது கள்ளநோட்டு ஒழிப்பு நடவடிக்கை என்றனர் தற்போது ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனைக்கான நடவடிக்கை எனக் கூறுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் மக்கள் குரலை குறிப்பாக ஏழைகளின் குரலை எதிரொலிக்க விரும்புகிறேன். அவர்கள்தான் மத்திய அரசின் பண மதிப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக பேச விரும்பும் எனக்குத் தடை போடப்படுகிறது.

எனவே நோட்டு நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும். அப்போதுதான் பண மதிப்பு நீக்கம் என்றால் என்ன? இதில் யார் யார் ஆதாயம் அடைந்துள்ளார்கள் என்பன பற்றி வெளிப்படையான வாதங்களை முன்வைக்க முடியும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் பல்வேறு உண்மைகளும் வெளியில் வரும். இதன் காரணமாகவே காங்கிரஸ் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x