Last Updated : 25 Dec, 2016 01:08 PM

 

Published : 25 Dec 2016 01:08 PM
Last Updated : 25 Dec 2016 01:08 PM

ஒரு தனி நபரின் சக்தி

என்னுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் இந்தத் தலைப்பைப் பார்த்ததும், இதை ஏற்கெனவே எங்கேயோ படித்திருக் கிறோமே என்று பரபரப்பார்கள். 31.07.2010-ல் இதே தலைப்பில் எழுதி யிருக்கிறேன்.

மத்தியத் தேர்தல் ஆணையத்தில் சிங்கமாக உலவிய கே.ஜே. ராவ் எழுதிய ‘தி கோப்ரா டான்சர்’ என்ற புத்தக வெளியீட்டின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா பேசியதிலிருந்து எடுத்த ஒற்றை வரிதான் அந்தத் தலைப்பு. பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராவ், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று மாதம் ரூ.12,000 என்ற குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு பிஹாரில் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை மிக நேர்மையாக நடத்தி, லாலு பிரசாதின் ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார். ராவின் புத்தகம் குறித்த விவாதத்தில் அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி, வர்மா ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். “ஒரு தனி நபர் ஒரு நிறுவனத்தையே மாற்றியமைத்துவிட முடியுமா, அதுவும் மிகக் குறுகிய காலத்தில்?” என்று கேட்டேன்.

“அது மிகவும் கடினம், ஆனால் சாத்தியம்தான்” என்று வர்மா பதில் அளித்தார். “நம் நாட்டை உருவாக்கிய முன்னோடிகள் விரும்பியவாறு இந்த நாட்டை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அந்தத் தலைவருக்கு (மோசமான) கடந்த காலம் இருக்கக்கூடாது, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு (பணம் சம்பாதிக்கும் பேராசை) இருக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார். அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது எளிதல்ல. தான் பணியாற்றிய உச்ச நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் என்ற இரண்டையும் நேர்மையான செயல்களால் தரம் உயரச் செய்தார் வர்மா. இந்திரா காந்தி காலத்தில் மிகத் துணிச்சலாக அவருடைய தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.ஆர். கன்னாவுக்குப் அடுத்தபடியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாரிசாகவே விளங்கியவர் வர்மா.

வேறு சிலர் கூட உதாரணங்களாய் இருக்கின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையம் என்பது வெறும் காகிதப் புலியாக மட்டுமே இருந்ததை டி.என். சேஷன் பொறுப்பு எடுத்துக் கொண்டதும் நிஜப் புலியாகவே மாற்றினார். மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.), மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) ஆகியவற்றுக்கும் இவர்களைப் போல தனி நபர்கள் தலைவர்களாக வந்தால் எப்படி இருக்கும் என்று 2010-ல் பேசிக் கொண்டோம். கடுமையான பிரிவுகளுடன் கூடிய ‘ஜன லோக்பால்’மசோதா பற்றியெல்லாம் பலரும் பேசத் தொடங்கினர். மோசமான கடந்த காலமும் எதிர்கால எதிர்பார்ப்பும் இல்லாத மூத்த காவல்துறை அதிகாரி இவ்விரு அமைப்புகளுக்கு அப்போது தலைமைப் பதவிக்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இப்போது சி.வி.சி. தலைவராக இருப்பவர், சகாரா-பிர்லா டயரிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திய முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி என்று காங்கிரஸ், ஆம்ஆத்மி வட்டாரத்தினர் பேசுகின்றனர். அந்த விசாரணை யாரையும் சிக்கவைக்காமல் முட்டுச்சந்தில் போய் முட்டி நின்றது. வர்மாவுக்குப் பிறகு புகழ் பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா. அவர்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சீரமைக்கப் பரிந்துரைகளைக் கூறுமாறு பணிக்கப்பட்டவர்.

பொருளாதாரச் சுதந்திரம் தொடங்கிய 25 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்புத்துறை, இன்சூரன்ஸ் துறை, பெட் ரோலியத் துறை, சுற்றுச்சூழல் துறை போன்றவற்றுக்கு அதிக அதிகாரங் களைக் கொண்ட ‘ஒழுங்காற்றுநர்’ பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் இப்போதுதான் தொடங்கப்பட்டவை, ‘அதிகார முள்ள ஒற்றை நபரால்’ ஆசிர்வதிக்கப்படக் காத்திருக்கின்றன என்று நீங்கள் கூறலாம். யு.கே. சின்ஹா என்ற அதிகாரியின் துணிச்சலால் இப்போதைக்கு ‘செபி’ அமைப்பு மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டதாக இருக்கிறது. சகாரா குழுமத்தின் தலைவர் சிறையிலிருந்தபடியே எழுதி, வெளியிட்ட புத்தக விழாவுக்கு பாஜக, காங்கிரஸ் (குலாம் நபி ஆசாத்) இரண்டின் மூத்த தலைவர்களும் சென்றிருந்தார்கள் என்றால் அவரது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் சகாரா தலைவரிடம் கணக்கு காட்டும்படி துணிச்சலாக கேட்டு அவரை சிறைக்கு அனுப்ப முக்கிய காரணியாக திகழ்ந்தவர் சின்ஹா. இதன் மூலம் அவரது நேர்மை எப்படிப்பட்டது என்பதையும் உணரலாம். சகாரா குழுமத்திடமிருந்து பிரதமர் மோடி, முன்னர் லஞ்சம் பெற்றிருக்கிறார் என்று ராகுல் காந்தி அதே நாளில்தான் குற்றஞ்சாட்டினார்!

நம்முடைய பொருளாதார அமைப்புகளி லேயே இந்திய ரிசர்வ் வங்கி ஒன்றுதான் மிகவும் மூத்தது, அனைவராலும் மதிக்கப்படுவது. இந்த நிறுவனம் நிதியமைச்சகத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது. பணமதிப்பு நீக்கம் என்ற மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகியிருந்தது.

இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன என்பது விவாதத்துக்குரியது. ‘ரிசர்வ் வங்கியின் போர்டு முடிவுப்படிதான்’ பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது. கறுப்புப் பண முதலைகளைக் கண்டுபிடிக்க ரகசியம் காக்கப்பட்டதை வரவேற்கலாம். நடவடிக்கை தொடங்கி 6 வாரங்களாகிவிட்டன. இனியும் ரகசியம் காப்பானேன்? ரிசர்வ் வங்கியின் இணையதளத்துக்குச் செல்லுங்கள். பணமதிப்பு நீக்க முடிவு ஏன் என்று அது கூறுகிறது. நவம்பர் 8-க்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக நடந்தது ஏன், அறிவிப்புகளை மாற்றிக் கொண்டே இருந்தது ஏன், 5,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் செலுத்தக்கூடாது என்று டிசம்பர் 20-ல் அறிவித்தது ஏன் என்பதற்கெல்லாம் அங்கே விளக்கம் இல்லை. வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகள் பற்றிய வாராந்திரத் தகவல்கள் இப்போது வெளியாவதில்லை. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனத்துக்கு இது அழகல்ல. எல்லா அரசியல் கட்சியினராலும் மதிக்கப்படுபவர் உர்ஜித் படேல். சர்வதேச அரங்கில் அவருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கென்யாவில் பிறந்ததால் அந்நாட்டின் குடியுரிமையை இயற்கையாகப் பெற்ற அவருக்கு இந்தியக் குடியுரிமையை தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வழங்கியதே பிரதமர் மன்மோகன் சிங் தான். 2013 அக்டோபரில் இந்தியக் குடியுரிமையைப் படேல் பெற்றார்.

ரிசர்வ் வங்கி வெளிப்படையான அமைப்பு.அதன் செயல்பாடுகளை சக ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் விவாதிக்கலாம் என்று கூற வேண்டியவர் உர்ஜித் படேல். இந்த அமைப்பின் புகழை உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை, இருப்பதாவது பறிபோய்விடாமல் காப்பாற்றினால் சரி.

சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x