Published : 29 Jul 2014 06:36 PM
Last Updated : 29 Jul 2014 06:36 PM

பெங்களூர் பள்ளிச் சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: ஜிம் பயிற்றுநர்கள் 2 பேர் கைது; ஸ்கேட்டிங் பயிற்றுநருக்கு தொடர்பில்லை?

பெங்களூரில் 6 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜிம் பயிற்றுநர்கள் லால்கிரி (21), வசீம் பாஷா (28) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே கைது செய்யப் பட்ட ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள மாரத் தள்ளி பகுதியில் ‘விப்ஜியார்' தனியார் பள்ளியில், முதல் வகுப்பு படிக்கும் 6-வயது சிறுமி கடந்த 2-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 14-ம் தேதி வர்த்தூர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவை (30) கடந்த 20-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அந்த பள்ளியின் நிறுவனத் தலைவர் ருஸ்டம் கேரவல்லாவும் கைதானார். பொது மக்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ராகவேந்திரா அவ்ராத்கரை மாநில அரசு பணியிட மாற்றம் செய்தது.

வகுப்பறையில் விபரீதம்

பெங்களூரின் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்த வழக்கு தொடர்பாக ஜிம் பயிற்றுநர்கள் லால்கிரி இந்திரகிரி (21), வசீம் பாஷா (28) ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளோம்.

நேபாளத்தைச் சேர்ந்த லால்கிரி பெங்களூரில் பொம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வசீம் பாஷா பெங்களூரில் உள்ள பசவநகரைச் சேர்ந்தவர். இருவரும் அந்த பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்துள்ளனர். விசாரணையில் இவ்விருவரும் சிறுமியை வகுப்பறையில் பலாத் காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376-ம் பிரிவின் கீழும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளோம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவிற்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ‘விப்ஜியார்' பள்ளி கடந்த திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 3000-க்கும் மேற் பட்ட மாணவ மாணவிகள் படிப்பதால் அவர்க‌ளின் பாதுகாப்பை க‌ருத்தில்கொண்டு 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன; 12 நிபந்தனை களை விதித்திருக்கிறோம்'' என்றார்.

போலீஸாருக்கு எதிர்ப்பு

இதனிடையே தீவிர விசா ரணைக்கு பிறகு முஸ்தபாவை கைது செய்ததாகக் கூறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடியை சமாளிப்பதற்காக அப்பாவிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப் பதை கைவிட வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சில சமூக நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முஸ்தபாவின் மனைவி ஆயிஷா கூறும்போது, "என்னுடைய கணவர் குற்றமற்றவர். அவர் பணியாற்றிய முந்தைய பள்ளியிலிருந்து பாலியல் புகார் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார் என கூறப்படும் தகவல் தவறானது. குறைந்த ஊதியம் காரணமாகவே, அங்கிருந்து விலகி, விப்ஜியார் பள்ளியில் சேர்ந்தார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஊடகங்களில் வந்த செய்தியால், எங்களின் குடும்பம் நிம்மதியை இழந்து தவித்தது. இறுதியாக இப்போது அவர் குற்றமற்றவர் என தெரியவந்திருக்கிறது" என்றார்.

பெங்களூரில் 31-ல் பந்த்

பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களை கண்டித்தும், குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக பல்வேறு கன்னட அமைப்புகளும், மாணவ அமைப் புகளும் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x