Published : 10 Dec 2022 09:43 PM
Last Updated : 10 Dec 2022 09:43 PM

இன்றைய இமாச்சல் முதல்வரைச் சந்தித்த நாளைய முதல்வர்

ஷிம்லா: இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூரை, முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சுக்விந்தர் சிங் சுகு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி சார்பில் சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக இன்று(டிச. 10) தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் சுக்விந்தர் சிங் சுகுவை தேர்வு செய்தது. முதல்வர் பதவியை எதிர்பார்த்தவர்களில் முக்கியமானவர் பிரதிபா வீரபத்ர சிங். இவர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவி. எனினும், கட்சி மேலிடம் சுக்விந்தர் சிங் சுகுவை தேர்வு செய்ததை அடுத்து, அந்த முடிவை ஏற்பதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிபா வீரபத்ர சிங் தெரிவித்தார்.

முதல்வர் தேர்வு சுமுகமாக நடந்து முடிந்ததை அடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்தனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு, இமாச்சல் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா வீரபத்ர சிங், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்திர பெகல் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுக்விந்தர் சிங் சுகு, நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழாக நடைபெற இருப்பதாகவும், இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அனைவரும் முதல்வர் ஜெய்ராம் தாகூரை, ஷிம்லாவில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுக்விந்தர் சிங் சுகு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர், ஜெய்ராம் தாகூரை சந்தித்தனர். அப்போது, நாளை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தர ஜெய்ராம் தாகூரை, சுக்விந்தர் சிங் சுகு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் தாகூர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுக்விந்தர் சிங் சுகுவுக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், இமாச்சலப் பிரதேச மக்களின் நலன்களுக்காக தாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றும் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரது சொந்த கிராமமான நாதூனில் ஆதரவாளர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் குமாரி, தனது கணவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இமாச்சலப் பிரதேச மக்களுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள நாளை ஷிம்லாவிற்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x