Published : 07 Dec 2022 10:38 AM
Last Updated : 07 Dec 2022 10:38 AM

'இது மிக முக்கியமான கூட்டத்தொடர்; சுமுகமாக நடத்த உதவுங்கள்' - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச.7) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 16 சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 17 நாட்கள் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடர் டிசம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்தக் கூட்டத்தொடர் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர். அதேபோல், இந்தியா ஜி20 மாநாட்டுக்கு தலைமையேற்றுள்ள நிலையில் நடைபெறும் கூட்டத்தொடர். அதனால் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. சர்வதேச சமூகத்தில் இந்தியா தனக்கென ஏற்படுத்தியுள்ள இடம் குறிப்பிடத்தக்கது. இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது மாதிரியான சூழலில் இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்றார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்றது.இந்தத் தேர்தலின் காரணமாகவே இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இன்றைய தினம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் அவருடன் ஈடுபட்டுள்ள இன்னும் சில மூத்த தலைவர்களும் கூட இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த இக்கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் ஆதரவு கோரப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

16 மசோதாக்கள்: இந்த கூட்டத்தொடரில் மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் வலுப்படுத்துதல் மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யவிருக்கிறார்.

இதேபோல், தேர்தல் செயல் முறை சீர்த்திருத்தம், கடலோர மீன் வளர்ப்பு ஆணைய மசோதா, வனப்பாதுகாப்பு மசோதா, மேலும் 1948ல் கொண்டு வரப்பட்ட பல் மருத்துவர் சட்டத்தை நீக்கி தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா, 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x