Published : 06 Dec 2022 04:51 AM
Last Updated : 06 Dec 2022 04:51 AM

ஜி20 உச்சி மாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி20 மாநாடு குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாடு குறித்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1999-ல் தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள 20 நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2023) ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

டெல்லியில் 2023 செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சகம் சார்பில் மாநாட்டு திட்டங்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளும் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக ஜி20 அமைப்புக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் முடிவில், மாநாட்டு பிரகடனத்தை உறுப்பு நாடுகள் இறுதி செய்தன. அதைத் தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x