Published : 05 Dec 2022 04:37 AM
Last Updated : 05 Dec 2022 04:37 AM

40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு: இன்று ஜி-20 மாநாடு ஆலோசனை

கோப்புப்படம்

புதுடெல்லி/சென்னை: ஜி-20 மாநாடு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு 40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

1999-ல் தொடங்கப்பட்ட ஜி-20 அமைப்பின் தலைமைப்பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் மாறுகிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது.

இந்தியா சார்பில் ஜி-20 அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானின்உதய்பூரில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் வங்கதேசம், எகிப்து, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், மொரீசியஸ் ஆகிய விருந்தினர்
நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் ஜி-20 மாநாடுகள் நடைபெறும் இடங்கள், அவற்றில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜி-
20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் ஓராண்டு காலத்தில், தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் 56 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள், கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக ஆலோசிக்க 40 கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மத்திய வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஜி-20 மாநாடு நடைபெறும் நகரங்களைப் புதுப்பொலிவுடன் மாற்றுவது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்று உபசரிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

உலக நாடுகள் எதிர்பார்ப்பு

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. எனவே, ஜி-20 தலைமைப் பொறுப்பின்போது இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன. பிரதமர் மோடியின் நட்புரீதியான அணுகுமுறையால், உலக நாடுகளை ஓரணியில் திரட்ட முடியும் என்று மேற்கத்திய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஸ்டாலின், பழனிசாமி பயணம்

ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

டெல்லியில் அவருக்கு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் இரவே சென்னை திரும்புகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று இன்று காலை 11 மணியளவில் விமானத்தில் பழனிசாமி டெல்லி செல்கிறார் என்று அதிமுக
வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x