Published : 04 Dec 2022 01:24 PM
Last Updated : 04 Dec 2022 01:24 PM

டெல்லி மாநகராட்சி தேர்தல்: கைப்பற்றப் போவது யார்? - பகல் 12 மணி நிலவரப்படி 18% வாக்குப்பதிவு

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் 12 மணி நிலவரப்படி 18% வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச்சட்டம், 2022 மூலம் தேசிய தலைநகரின் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும். இதில், வெற்றி பெற மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி போட்டா போட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டன. இந்தத் தேர்தல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் மூன்று தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நியமித்துள்ளது. டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும். டிசம்பர் 8 ஆம் தேதி குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.

முன்னதாக இன்று காலை அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்ட ட்வீட்டில், ,"டெல்லியை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும், ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும் இன்றைய தேர்தல் உதவியாக இருக்கும். நேர்மையான மற்றும் செயல்படும் வகையிலான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க இன்று உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என ஒட்டுமொத்த டெல்லிவாசிகளும் கூறிகொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். டெல்லி மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மக்களும் இவ்விஷயத்தில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் குப்பை மேலாண்மைக்கான வாக்குறுதிகளையே மக்கள் பெரிதும் விரும்பியுள்ளனர்.

பாஜக குற்றச்சாட்டு: இதற்கிடையில், டெல்லி சுபாஷ் மொஹல்லா வார்டில் 450 வாக்காளர்களின் பெயர்கள் வாக்குப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி. டெல்லி அரசு தான் இதனை செய்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் புகார் அளித்து இந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோருவோம் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டினார்.

இதேபோல் டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தல்லுபுரா வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை. என் மனைவி பெயர் உள்ளது. அவர் வாக்களித்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

கிருஷ்ணா நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த முன்னாள் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் வாக்களித்துவிட்டேன். டெல்லி மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் தங்கள் கடமையாற்றுவார்கள் என்று நம்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக நாட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. டெல்லி மக்கள் பாஜகவின் பணியை 15 ஆண்டுகளாகப் பார்த்துள்ளனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x