Published : 30 Nov 2022 06:44 PM
Last Updated : 30 Nov 2022 06:44 PM

2016-ல் ஒரு லட்சத்துக்கு 130, 2020-ல் 97... - இந்தியாவில் குறைந்தது பேறுகால தாய், சேய் இறப்பு விகிதம்

புதுடெல்லி: இந்தியாவில் 2014-16-ல் ஒரு லட்சத்துக்கு 130-ஆக இருந்த பேறுகால தாய், சேய் இறப்பு விகிதம், 2018-20-ல் ஒரு லட்சத்துக்கு 97-ஆக குறைந்துள்ளது.

பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், இந்தியாவின் பேறுகால இறப்பு விகிதம் குறைந்து இதில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆகவும், 2015-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 122-ஆகவும், 2016-18 காலகட்டத்தில் 113-ஆகவும், 2017-19 காலகட்டத்தில் 103-ஆகவும், 2018-20-ஆம் காலகட்டத்தில் 97-ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 1 லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்படுகிறது.

நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டி மிகச் சிறப்பான முறையில் செயல்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 6-லிருந்து 8-ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் சராசரியை விட குறைவான பேறுகால இறப்பு விகிதம் உள்ளது. அதன்படி கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, ஜார்க்கண்ட் 56, குஜராத் 57, கர்நாடகா 69 என்ற அளவில் பேறுகால இறப்பு விகிதம் உள்ளது.

2014-ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், தரமான பேறுகால சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்படுகிறது. ஜனனி சிசு சுரக்‌ஷா கார்யக்ரம், ஜனனி சுரக்‌ஷா யோஜனா, சுரக்‌ஷித் மாத்ரித்வ ஆஷ்வாசன், பிரதமரின் சுரக்‌ஷித் மாத்ரித்வ அபியான் ஆகிய திட்டங்களும் பேறுகால இறப்பை குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

லஷ்யா மற்றும் மருத்துவ தாதியர் முன்முயற்சிகளும் தரமான பேறுகால சிகிச்சைகளை ஊக்குவித்துள்ளன. பேறுகால இறப்பை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒருபகுதியாக 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே பேறுகால இறப்பை 70-க்கும்கீழ் குறைத்து, மேலும் பாதுகாப்பான பேறுகால பராமரிப்பை வழங்கும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ட்வீட்: பேறுகாலத்தின்போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதம் நாட்டில் குறைந்திருப்பது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த சாதனைக்காக பாராட்டுத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

“2014-16-ஆம் ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவாக 97 என குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சுகாதார முன்முயற்சிகளை மேற்கொண்டு தரமான பேறுகால சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்திருப்பது, பேறுகால இறப்பை பெருமளவு குறைக்க உதவியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பாராட்டு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x