Last Updated : 28 Nov, 2022 06:49 AM

 

Published : 28 Nov 2022 06:49 AM
Last Updated : 28 Nov 2022 06:49 AM

பாரதியார் இல்லத்தை நினைவகமாக மாற்றுவது யார்? - உ.பி, அரசு தீவிரம்; தமிழக அரசின் முயற்சிக்கு சிக்கல்

கோப்புப்படம்

புது டெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியின் ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் இளம் வயதில் வாழ்ந்த இல்லம் உள்ளது. 'சிவமடம்' என்றழைக்கப்படும் இங்கு பாரதியார் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார். தற்போது இந்த இல்லத்தில் பாரதியாரின் சகோதரி மருமகன் பி.வி.கிருஷ்ணன் (97), அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பாரதியார் வசித்த இல்லத்தை நினைவகமாக மாற்ற குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முழு வீட்டையும் அரசிடம் ஒப்படைக்க கிருஷ்ணன் மறுத்தார்.

இந்நிலையில், பாரதியார் குடும்பத்தினரிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஒரு சிறிய அறையை மட்டும் நினைவகமாக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. பாரதியாரின் மார்பளவு சிலையுடன் ஒரு நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு கடந்த ஜுலை 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பாரதி குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்று ரூ.18 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 20-ம் தேதி இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாரதியார் இல்லத்துக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சென்றார். அவர்களது இல்லத்தில் ஒரு பகுதியை நினைவகமாக மாற்றும் விருப்பத்தையும் வெளியிட்டார். இதையடுத்து பாரதியார் குடும்பத்தினருடன் வாரணாசி மாவட்ட ஆட்சியர், தமிழர் எஸ்.ராஜலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முழு வீட்டையும் புனரமைப்பதுடன் அதன் கீழ் பகுதியை மட்டும் நினைவகமாக மற்றுவது என பெருந்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் திருநெல்வேலி கடையநல்லூரை சேர்ந்தவரான ஆட்சியர் ராஜலிங்கம் கூறும் போது, ‘டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்பட்டு, புதிதாக ஒரு தனி நுழைவு வாயில் அமைக்கும் திட்டம் உள்ளது. பாரதியாரின் இலக்கியம், கவிதை படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தின் பங்கு, அவர் செய்த சமுதாயப் புரட்சி உள்ளிட்டவை நினைவகத்தில் முக்கியத்துவம் பெறும். ஹோலோகிராமில் பாரதி வீட்டில் நடப்பது போல காட்சி அமைக்கும் திட்டமும் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்தபிறகு பணிகள் தொடங்கும்’ என்றார்.

பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11-ம் தேதியை 'தேசிய மொழிகள் தினமாக’ கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி டிசம்பர் 11-ம் தேதி பாரதியார் இல்லத்துக்கு நேரில் சென்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு உள்ளது.

பாரதியாரின் இல்லத்தை நினைவகமாக மாற்ற அனுமதி அளிக்க கோரி வாரணாசி மாவட்ட நிர்வாகத்திடம் தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறாமல் தமிழக அரசால் பாரதியார் இல்லத்தின் அறையை, நினைவகமாக மாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழக முதல்வர் காணொலி வாயிலாக நினைவகத்தை திறப்பது கேள்விக் குறியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x