Published : 23 Nov 2022 05:40 AM
Last Updated : 23 Nov 2022 05:40 AM

சபரிமலை பக்தர்கள் விமானங்களில் இருமுடி பைகளை எடுத்து செல்ல அனுமதி

புதுடெல்லி: சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பணியகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பிசிஏஎஸ்-ன் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்,விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்களின் நன்மைையை கருதி இருமுடியை தங்களது கைப்பைகளிலேயே கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், எக்ஸ்-ரே, இடிடி (வெடிகுண்டு சோதனை கருவி),உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் உடன் கொண்டு செல்ல முடியும். சபரிமலை சீசன் முடிவடையும் ஜனவரி இறுதிவரை இந்த தளர்வுகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தற்போதைய விதிமுறைகளின் படி, தேங்காய் எரியும் தன்மைகொண்டது என்பதால் விமானங்களில் அதனை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x