Published : 16 Nov 2022 05:40 PM
Last Updated : 16 Nov 2022 05:40 PM

ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மாக்கன் ராஜினாமா?

அஜய் மாக்கன் | கோப்புப் படம்

புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, அதற்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, ஒருவர் இரு பதவிகளை வகிக்க வாய்ப்பு இல்லை என ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால், அஷோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் முதல்வராக அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியது. இதற்கு, அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்ததால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சி மேலிடம் அப்போதைய மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோரை அம்மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது.

ஜெய்ப்பூர் சென்ற இருவரும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை சந்திக்க அழைப்பு விடுத்தனர். எனினும், அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இந்தச் சந்திப்பை புறக்கணித்தனர். மேலும், சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய இந்த எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அஜய் மாக்கன் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அஜய் மாக்கன் கடந்த 8-ம் தேதி ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்ற விஷயமும் வெளியாகி இருக்கிறது. உறுதிப்படுத்தப்படாத அந்த ஒரு பக்க கடித விவரம்: காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானுக்கு வருகிறது. எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக புதிய பொறுப்பாளரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸின் சித்தாந்தத்தை கடந்த மூன்று தலைமுறைகளாக ஏற்றுள்ள பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் நான். காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருப்பவன் நான். ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளராக எப்போதும் பின்தொடருவேன். அவர் மீதான எனது நம்பிக்கை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் அஜய் மாக்கன் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லி மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அஜய் மாக்கன், மீண்டும் டெல்லி அரிசியலுக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x