Published : 02 Nov 2016 05:29 PM
Last Updated : 02 Nov 2016 05:29 PM

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்குவதாக கூறி டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய பாதுகாப்புப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால கோரிக்கை.

இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும் அத்திட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மத்திய அரசு பின்வாங்குகிறதே என்பதே குற்றச்சாட்டு.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (புதன்கிழமை) முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கரேவால் (69) தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்து தனது சகாக்களுடன் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரை பார்க்க புறப்பட்டார். மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்தபோது அவர் மயங்கிவிழுந்து இறந்தார். பாதுகாப்பு அமைச்சரை பார்க்கச் செல்வதற்கு முன்னரே கரேவால் விஷம் அருந்தியிருந்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

சிசோடியா கைது:

இதற்கிடையில், டெல்லி துணை முதல்வர் சிசோடியா, இறந்துபோன முன்னாள் ராணுவ வீரர் சுரேந்திராவின் மகன் ராம் கிஷனை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்குவந்த போலீஸார் சிசோடியாவை சிறைபிடித்தனர். அவருடன் அங்கிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரேந்திராவும் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் இரங்கல்:

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டதற்காக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். ”ராம் கிஷன் கரேவாலின் மரணம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குறித்த தகவல்களை கோரியுள்ளேன்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் வலியுறுத்தல்:

டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இனியாவது பிரதமர் 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x