Published : 10 Nov 2022 03:27 PM
Last Updated : 10 Nov 2022 03:27 PM

லாலுவுக்கு சிறுநீரகம் தானமாகத் தருகிறார் இளைய மகள் ரோஹிணி; சிங்கப்பூரில் சிகிச்சை

லாலு பிரசாத் யாதவ், இளைய மகள் ரோஹிணி

பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அவரது இளைய மகள் ரோஹிணி சிறுநீரகம் தானமாகக் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா. இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுநீரகப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வரும் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாகவே ரோஹிணி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், லாலு தட்டிக்கழித்து வந்த நிலையில் தற்போது அவரும் சிங்கப்பூர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் லாலு சிங்கப்பூர் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளனர்.

அப்போதே ரோஹிணி தனது சிறுநீரகங்களை தானமாகத் தர முன்வந்துள்ளார். ஆனால், அப்போது லாலு இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதன்பின்னர், ரத்த சம்பந்தம் உடையவர்கள் சிறுநீரக தானம் செய்யும்போது அது வெற்றிகரமாக அமையும் என்று எடுத்துரைத்து தந்தை லாலுவிடம் சம்மதம் பெற்றுள்ளார். இதனையடுத்து முறைப்படி அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், நவம்பர் 20 முதல் 24-ஆம் தேதிக்குள் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x