Published : 02 Nov 2022 11:17 AM
Last Updated : 02 Nov 2022 11:17 AM

இந்திய ஒற்றுமை யாத்திரை | தெலங்கானாவில் ராகுலுடன் நடந்த பாலிவுட் நடிகை பூஜா பட்

நடிகை பூஜா பட், ராகுல் காந்தி

ஹைதராபாத்: இந்திய ஒற்றுமை யாத்திரையின் 56 வது நாளில் பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் பூஜா பட் புதன்கிழமை பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 56 வது நாளான இன்று (நவ.2 ஆம் தேதி) புதன்கிழமை ஹைதராபாத்தில் நடந்த யாத்திரையில் பாலிவுட் நடிகை பூஜா பட் கலந்து கொண்டார். அவர் ராகுல் காந்தியுடன் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ, படங்களை வெளியிட்டு, "ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தினமும் இந்திய ஒற்றுமை யாத்திரை மீதான நாட்டு மக்களின் அன்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

தெலாங்கனா மாநிலம் ஹைதராபாத் நகரில் காலையில் நடந்த யாத்திரையின் முன்பக்கமாக இருந்து வந்த பூஜா பட், ராகுல் காந்தியுடன் கை குலுக்கிய பின்னர் அவருடன் யாத்திரையில் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.

இதன் மூலம் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாலிவுட் பிரபலங்களின் வரிசையில் பூஜா பட் இணைந்துள்ளார். முன்னதாக, ஸ்வரா பாஸ்கர் ராகுல் காந்தியையும், இந்திய ஒற்றுமை யாத்திரையையும் பாராட்டி இருந்தார்.

தெலாங்கானாவில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா பிசிசியின் தற்போதைய தலைவருமான முகமது அசாரூதின், நடிகை பூனம் கவுர் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த யாத்திரையில் தெலங்கானாவின் பல்கலையில், அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

ராகுலை சந்தித்த பின்னர் ராதிகா வெமுலா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவளிக்கும் வகையில் யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது அவரிடன், பாஜக-ஆர்எஸ்எஸ் தாக்குதலில் இருந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவும், ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க ரோகித் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், நீதித்துறை, உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலித், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக அநீதி மற்றும் பிரிவினைக்கு எதிரான எனது போராட்டத்தின் அடையாளமாக ரோகித் வெமுலா உள்ளதாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் வழியாக கடந்து தற்போது தெலங்கானாவில் நடந்து வருகிறது. இது நவ.7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x