Last Updated : 30 Nov, 2016 02:06 PM

 

Published : 30 Nov 2016 02:06 PM
Last Updated : 30 Nov 2016 02:06 PM

தேர்தல் வெற்றிகள் நோட்டு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவின் அடையாளம்: அமித் ஷா

உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பாஜக தலைவர் அமித் ஷா, தேர்தல் வெற்றிகள் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு மக்களிடையே உள்ள ஆதரவை காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட அமித்ஷா பேசும்போது, ''கருப்புப் பணத்துக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது. உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல் முடிவுகள் இதைக் காட்டுகின்றன. சில எதிர்க்கட்சியினர் ஊழல் மோசடிகள் மூலம், அவர்கள் சம்பாதித்த பணம் முழுவதும் குப்பைக்குச் சென்றதால் கவலைப்படுகின்றனர்" என்றார்.

அரசுக்கு மக்கள் துணை நிற்கின்றனர்:

அவர் மேலும் கூறும்போது, "எதிர்க்கட்சியினர் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர். நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினர். ஆனால் தேர்தல் முடிவுகளில் பாஜக எல்லா இடங்களிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றிகளைக் குவித்துள்ளது. அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி.

ஏழை மக்களிடம் கருப்புப் பணம் இருப்பதில்லை. ராகுல், அகிலேஷ், சகோதரி மாயாவதி என மக்களிடம் பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். கறுப்புப் பணத்தோடு பிடிபடுவர்கள், 50 சதவீத பணத்தை இழப்பார்கள். அந்தப்பணம் நாட்டின் கரூவூலத்தில் சேர்க்கப்படும்'' என்றார்.

பாஜகவின் தேர்தல் வெற்றிகள்:

அண்மையில் நடந்த அசாம், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை இடைத்தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது.

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 123 இடங்களில் 107 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியாகின. இந்தத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது.

தமிழகத்தில் மூன்று தொகுதி தேர்தலில் தேமுதிகவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு வந்தது. இருப்பினும் தேர்தலில் பாஜக டெபாசிட் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி நன்றி:

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அண்மையில் நடந்த சட்டப் பேரவை இடைத்தேர்தல், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது, பாஜகவுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியபோது, ''ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்கள் மத்திய அரசுக்கு முழுஆதரவு அளிக்கின்றனர். அதன் வெளிப்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x