Published : 01 Nov 2022 06:25 AM
Last Updated : 01 Nov 2022 06:25 AM

குஜராத் பாலம் விபத்தில் நடந்தது என்ன? - உயிர் பிழைத்தவர்களின் கண்ணீர் கதை

குஜராத்தின் மோர்பி நகர தொங்கு பாலம் அறுந்து நதியில் விழுந்தது. அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நேற்று சடலங்களை மீட்டனர். படம்: பிடிஐ

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு நடைபாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்தது. இதில் 141 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை.

பாலம் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்த சாட்சிகள் ஊடகங்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிர் பிழைத்த ஆரிப் என்பவர் கூறும்போது, “நான், எனது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என 8 பேர் மோர்பி தொங்கு பாலத்துக்கு சென்றோம். எனது மனைவியும் 5 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். எனது மகள் உட்பட 5 பேரை காணவில்லை" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

விபத்தில் உயிர் பிழைத்த ஹாலிமாபென் கூறும்போது, “நான், எனது மகன், மருமகள், பேரக் குழந்தைகளோடு தொங்கு பாலத்துக்கு சென்றேன். நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். எனது குடும்பத்தில் 6 பேரை இழந்துவிட்டேன்" என்றார்.

குஜராத்தின் ஜாம் நகரை சேர்ந்த ரூபேஷ் தனது மனைவி 3 குழந்தைகளுடன் மோர்பி தொங்கு பாலத்துக்கு சென்றார். விபத்தில் ரூபேஷ் மட்டும் உயிர் பிழைத்தார். அவர் கூறும்போது, “பாலம் உடைந்த போது அனைவரும் நதியில் விழுந்து விட்டோம். நானும் எனது மனைவியும் ஒரு கேபிளை பிடித்து கரைக்கு வந்துவிட்டோம். ஆனால் குழந்தைகளை காணவில்லை. எனது மனைவி மீண்டும் நதியில் குதித்து குழந்தைகளை தேடினாள். சகதியில் சிக்கி அவளும் உயிரிழந்துவிட்டாள்" என்று தெரிவித்தார்.

மோர்பி நகரை சேர்ந்த ஹர்திக், அவரது மனைவி மிருள், 4 வயது மகன் ஜினேஷ் ஆகியோர் தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்தனர். பாலம் அறுந்து விழுந்ததில் கணவரும், மனைவியும் உயிரிழந்துவிட்டனர். உள்ளூர் மக்கள் 4 வயது குழந்தை ஜினேஷை காப்பாற்றினர்.

மோர்பி நகரை சேர்ந்த ஆனந்த் பானேஜ் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என 36 பேருடன் தொங்கு பாலத்துக்கு சென்றார். அவர்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இதில் 30 பேர் உயிர் பிழைத்து விட்டனர். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். இதில் ஒரு பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது.

மோர்பி நகரில் பணியாற்றும் தொழிலாளி சுபாஷ் கூறியதாவது: அருகில் உள்ள கிருஷ்ணர் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளேன். ஞாயிறு விடுமுறை நாளில் தொங்கு பாலத்துக்கு செல்வது வழக்கம். விபத்து நேரிட்ட போது நான் பாலம் அருகே நின்றிருந்தேன். அந்த நேரத்தில் பாலத்தின் மீது ஏராளமானோர் நின்றிருந்தனர். என் கணிப்பின்படி 1,000 பேர் பாலத்தில் நின்றிருக்கலாம். திடீரென நடுப் பகுதியில் பாலம் உடைந்தது.

நானும் உடன் இருந்தவர்களும் நதியில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டோம். இளம் வயதினர் நீந்தி கரையேறி விட்டனர். ஆனால் குழந்தைகள், முதியவர்களால் தப்ப முடியவில்லை. நான் 8 பேரை மீட்டேன். பலர் நதியின் அடியில் சகதியில் சிக்கிக் கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக எம்.பி.யின் 12 உறவினர்கள் உயிரிழப்பு: குஜராத் ராஜ்கோட் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. மோகன் குந்தாரியா கூறும்போது, “ தொங்கு பாலம் விபத்தில் எனது மூத்த அண்ணனின் குடும்பத்தினரை இழந்துவிட்டேன். அண்ணனின் 4 மகள்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x