Published : 31 Oct 2022 04:48 AM
Last Updated : 31 Oct 2022 04:48 AM

சூரிய மின்சக்தி, விண்வெளித் துறைகளில் அதிசயங்களை நிகழ்த்தும் இந்தியா -`மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: சூரிய மின்சக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் `மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான 94-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:

சூரிய மின்சக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு முதல் நாள், ஒரே நேரத்தில் 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பு மேம்படும்.

செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு, இதர பகுதிகளுடன் எளிதாக இணைப்பு கிடைக்கும். இந்தியாவின் சாதனைகளைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியப்படுகிறது.

நமது விஞ்ஞானிகள் ஏராளமான செயற்கைக்கோள்களை ஒரேநேரத்தில் விண்ணுக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் உலகளாவிய விண்வெளி வர்த்தக சந்தையில், இந்தியா வலுவான நாடாக உருவாகியுள்ளது.

2047-ம் ஆண்டு வரை இளைஞர்கள்தான் இந்தியாவை முன்னேற்றுவர். 100-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும்போது, இளைஞர்களின் சக்தி, கடின உழைப்பு ஆகியவை இந்தியாவை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்.

இந்திய தொழில்கள் மற்றும்ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வருகின்றன.

இத்துறையில் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. அரசு சாரா நிறுவனங்களும், இன்-ஸ்பேஸ் நிறுவனம் மூலம் தங்களின் கருவிகளையும், செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு ஏவும் வசதியைப் பெற்றுள்ளன.

சூரிய மின்சக்திதான் எதிர்காலம்: சூரிய பகவானை வழிபடும் `சத் பூஜை' கொண்டாடும் வேளையில், சூரிய சக்தி பற்றியும் நாம் பேச வேண்டும். இந்தியா இன்று பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியலுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், சூரிய மின்சக்தி துறையில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.

குஜராத்தின் மொதேரா சூரிய கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள், சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் தற்போது மாத இறுதியில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை. மாறாக, சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம், அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.

சென்னை ஐஐடி-ன் 5ஜி: இந்திய ஐஐடி மாணவர்கள் கடந்த 14, 15-ம் தேதிகளில், தங்களது 75-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வு செயல் திட்டங்களைக் காட்சிப்படுத்தினர்.

ஆரோக்கியப் பராமரிப்பு, விவசாயம், ரோபோடிக், 5ஜி தகவல் தொடர்பு என ஏராளமான ஆய்வுத் திட்டங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்டிருந்தன. ஐஐடி புவனேஸ்வர் குழு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வென்டிலேட்டரை, குறித்த காலத்துக்கு முன்பே பிறக்கும் சிசுவுக்காக மேம்படுத்தியிருக்கிறார்கள். பேட்டரியில் இயங்கும் இதை, தொலைவான இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.

சென்னை ஐஐடி, கான்பூர் ஐஐடி ஆகியவை இணைந்து, உள்நாட்டு 5ஜி அலைக்கற்றை சோதனைக் களத்தை தயார் செய்ததில், முதன்மைப் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு பிரமாதமான தொடக்கம்.

ஐஐடி-க்களின் கருத்து ஊக்கத்தால் உந்தப்பட்டு, பிற நிறுவனங்களும் ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்புடைய செயல்பாடுகளில் வேகத்தைக் கூட்டுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x