Last Updated : 23 Oct, 2022 06:10 PM

Published : 23 Oct 2022 06:10 PM
Last Updated : 23 Oct 2022 06:10 PM

கர்நாடகா | உதவி கேட்டுவந்த பெண்ணை அறைந்த அமைச்சர்: வைரலான வீடியோ; விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

சாமராஜ நகர்: கர்நாடகாவில் உதவி கேட்டு வந்த பெண்ணை பாஜக அமைச்சர் பொதுநிகழ்ச்சியில் அறைந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் கர்நாடக முதல்வர் நாளைக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா, சாமராஜநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ளவர். குண்ட்லுப்பேட்டை பகுதியில் ஹங்லா கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சொந்தநிலமின்றி அரசு நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்க அமைச்சர் சோமண்ணா சற்றே தாமதமாக வந்ததாக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடையே வீட்டுமனைப்பட்டா பெறுவதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ​​அமைச்சரை ஒரு பெண் அணுகி, தனக்கு இலவச மனைப்பட்டா வழங்குமாறு வேண்டினார். அந்நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளப்பட்டதால் கோபமடைந்த அமைச்சர் அந்த பெண்ணை அறைந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும் அமைச்சர் இதுகுறித்து இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை.

இதற்கிடையில் அமைச்சகத்தின் அலுவலகம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்தப் பெண், தான் மிகவும் ஏழ்மையாக இருப்பதால் தனக்கு ஒரு மனைப்பட்டா மட்டுமே வழங்குமாறு கெஞ்சினேன் என்று கூறினார்.

"அவர் எனக்கு உதவுவார் என நான் அவரது காலில் விழுந்து வணங்கினேன், அமைச்சர் என்னைத் தூக்கி ஆறுதல் கூறினார், ஆனால் அவர் என்னை அடித்தார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது," என்று அந்த பெண் தனது குழந்தைகளுடன் வீடியோவில் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மகளிர் அமைப்பு, பெண்களை மதிப்பது குறித்து விரிவுரையாற்றும் மோடிஜி தனது சொந்தக் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், அமைச்சரின் நடத்தை குறித்து விமர்சித்துள்ள ட்விட்டர் பதிவில், "செப்டம்பர் 30ஆம் தேதி அதே குண்ட்லுப்பேட்டையில் இருந்து, #ராகுல் காந்தி, #பாரத்ஜோடோ யாத்திரையின் கர்நாடகப் பயணத்தைத் தொடங்கிய விதத்திற்கும் என்ன வித்தியாசம். இவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் இந்தியில் ஒரு ட்வீட்டில், பாஜகவின் ஆணவத்திலிருந்து விடுபட, “துடைப்பம்” (ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னம்) தேவை என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் விளக்கம் அளிக்க முதல்வர் உத்தரவு: சமூக வலைதளங்களில் உருவான சர்ச்சைகளை அடுத்து கர்நாடக முதல்வர் அமைச்சர் சோமன்னாவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசிய அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படும் அமைச்சர் வி.சோமன்னாவிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவின்படி அமைச்சரின் மூர்க்கத்தனமான செயலுக்கான விளக்கத்தை திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சரின் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி சனிக்கிழமை இரவு காலமானார், அவரது இறுதி சடங்குகளில் அரசாங்கமும் கட்சியும் மும்முரமாக உள்ளன, இல்லையெனில் இன்றே விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஊடகச் செய்திகளின்படி, வீட்டு பட்டா உரிமைப் பத்திரங்களை விநியோகிப்பதற்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக அந்தப் பெண் கூறியதாகவும், தனக்கு ஒரு இடத்தை ஒதுக்கித்தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x