Last Updated : 19 Oct, 2022 08:13 AM

9  

Published : 19 Oct 2022 08:13 AM
Last Updated : 19 Oct 2022 08:13 AM

உயர் கல்வியில் இந்தி திணிப்பு புகார் எதிரொலி - அறிக்கையை திருத்தம் செய்கிறார் அமைச்சர் அமித் ஷா?

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது இந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது. இதை சமாளிக்க அறிக்கையை வாபஸ் பெற்று திருத்தம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக அமைச்சர் அமித் ஷா உள்ளார். நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஆட்சி மொழிக்குழுவின் 37-வது கூட்டம், கடந்த ஏப்ரல் 7-ல் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளுடனான, ஆட்சி மொழிக்குழுவின் 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடந்த செப்டம்பர் 9-ல் அமித் ஷா அனுப்பி இருந்தார். இதன் சாராம்சம் ஒரு இணையதளத்தில் கடந்த 8-ம் தேதி வெளியானது. இதையடுத்து தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் உயர்கல்வியிலும் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு செய்வதாகப் புகார் கிளம்பியது. தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக போராட்டங்களை தொடங்கியது. இதேபோல், இந்தி பேசாத இதர மாநிலங்களிலும் அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை மீதான பிரச்சினை எழுந்தது.

கர்நாடக முன்னாள் முதல்வரான எச்.டி.குமாரசாமி, ‘மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வாணையத்தின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருப்பது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் இடையே கூட்டத்தினர் முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘பொதுமக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. இதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை காங்கிரஸின் தீவிர போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்’ என்றார்.

மெல்ல வலுப்பெறும் இந்தப் போக்கு, வரும் 2024 மக்களவை தேர்தலில் தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என பாஜக அஞ்சத் தொடங்கி உள்ளது. இதன் மீது புகார்களும் கருத்துகளும் நாடு முழுவதிலும் உள்ள தங்கள் கட்சி தலைவர்களிடமிருந்து பாஜக தலைமைக்கு வந்தவண்ணம் உள்ளன.

இதை சமாளிக்கும் வகையில் நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதில், மாநில மொழிகளிலும் சட்டக்கல்வி பயிற்றுவிக்க அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், அந்த அறிக்கையில் சில முக்கியத் திருத்தங்களை செய்து மீண்டும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்ப அமித் ஷா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்து மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்புவார். இது நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படுவதுடன் மாநிலஅரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பிறகு பொதுவெளியில் வெளியாகி, நாடு முழுவதிலும் அமலாகும்.

நாடாளுமன்ற எம்பிக்களுக்கான குழுக்கள் 2 வகையாக உள்ளன. அவற்றில் ஒன்று நிலைக்குழுக்கள். இதன் தலைவராக குறிப்பிட்ட கட்சிக்கான எண்ணிக்கையை பொறுத்து அதன் எம்பிக்கள் தலைவர்களாக நியமிக்கப்படுவர். மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்குமான இந்த நிலைக்குழுக்களில் நாடாளுமன்ற எம்பிக்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

மற்றொன்று, மத்திய அமைச்சகங்களுக்கான ஆலோசனைக்குழு ஆகும். இரு அவைகளின் எம்பிக்கள் கொண்ட இக்குழுவுக்கு அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் தலைவராக இருப்பார். இந்த வகையில் 1976 முதல் மத்திய ஆட்சிமொழிப் பிரிவுக்கும் உள்ள ஒரு ஆலோசனைக்குழுவில் மக்களவை 20, மாநிலங்களவை 10 என 30 எம்.பி.க்கள் உறுப்பினர் களாக உள்ளனர். தற்போதுள்ள இக்குழுவில் தமிழகத்திலிருந்து ஒரு எம்பியும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x