Published : 18 Oct 2022 05:21 AM
Last Updated : 18 Oct 2022 05:21 AM

மாற்று கட்சி மீது நம்பிக்கை இல்லாததால் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர் - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேச்சு

சசி தரூர்

லக்னோ: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சசி தரூர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாட்டில் நடக்கும் விஷயங்களில் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி இல்லை என்று அனைவருக்குமே தெரியும். அதே நேரத்தில் பொதுமக்கள் எங்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகிறது.

இந்த கூட்டம் நடைபெறும் அரங்கில் இருக்கும் பலர் 2014, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்து 2 தேர்தல்களிலும் பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் இருக்கலாம். 2014, 2019-ம் ஆண்டு களில் பல இடங்களில் பிரதமர் மோடி சிறப்பான உரைகளை நிகழ்த்தினார். நாட்டில் சிறந்த பொருளாதாரம் தழைக்கவும், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் அவர் அப்போது உறுதியளித்தார். ஆனால், தற்போது எட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நாம் சந்தித்து வருகிறோம்.

இந்த நேரத்தில் மக்கள் ஏன் பாஜக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? மாற்று கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால் பாஜக அதிக வாக்குகளைப் பெறுவதாக நினைக்கிறேன். என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்.

தற்போதைய ஆட்சிக்கு மாற் றாக அதிகாரப் பரவலாக்கம், நவீன மயமாக்கல் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தன்னுள் மாற்றங்களை கொண்டு வந்து, புதிய ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் சென்றால், கட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நாமும் வெற்றியை ருசிக்கலாம்.

காங்கிரஸ் கட்சி இன்றுவரை இந்திய அரசியலில் நிலைத்து நிற்கிறது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறலாம். அல்லது தோல்வியும் அடையலாம். இந்தத் தேர்தலில் கார்கே வெற்றி பெற்றாலும் சரி அல்லது நான் வெற்றி பெற்றாலும் சரி. காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x