Published : 11 Oct 2022 07:50 PM
Last Updated : 11 Oct 2022 07:50 PM

ஷிண்டே தலைமையிலான ‘பாலாசாஹேப்பின் சிவ சேனா’ கட்சிக்கு போர்வாள் - கேடயம் சின்னம் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாஹேப்பின் சிவ சேனா கட்சிக்கு போர் வாள் - கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என சிவ சேனா இரண்டாக பிரிந்ததை அடுத்து, கட்சியின் பெயருக்கும் வில் அம்பு சின்னத்திற்கும் உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். கட்சியின் பெயரும் சின்னமும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி, உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தவ் தாக்கரே கட்சி சார்பில் ருதுஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில், ஷிண்டே தரப்பில் யாரும் போட்டியிடவில்லை. மாறாக, பாஜக சார்பில் முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே என இரு தரப்பும் சிவ சேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. இரு தரப்புக்கும் கட்சியின் பெயரை புதிதாக பதிவு செய்யவும், சின்னங்களை புதிதாக பெற விண்ணப்பிக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட 3 பெயர்களில் ஒன்றான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த அணி அளித்த 3 சின்னங்களில் ஒன்றான தீபச் சுடர் சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஷிண்டே தரப்பு அளித்த 3 பெயர்களில் ஒன்றான பாலாசாஹேப்பின் சிவ சேனா என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. கட்சி சின்னமாக போர் வாள் - கேடயம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே அணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அது ஷிண்டே தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால், இந்த இடைத் தேர்தலில், பாஜகவின் முர்ஜி பட்டேல் வெற்றி பெற ஷிண்டே அணியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x