Published : 11 Oct 2022 12:20 PM
Last Updated : 11 Oct 2022 12:20 PM

இந்திய ஒற்றுமை யாத்திரையில் குழந்தைகள் | காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் குழந்தைகள்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிசிஆர் National Commission for Protection of Child Rights (NCPCR) கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் யாத்திரையில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திங்கள் கிழமை இரவு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், இந்தக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "ராகுல் காந்தியுடன் குழந்தைகள் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து இதில் மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டமோ, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவோ இல்லை என்று விளக்கம் அளித்தோம். இருந்தாலும் தேர்தல் ஆணையம் ஏன் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது என்று புரியவில்லை. என்சிபிசிஆர்-ன் குழந்தைத்தனமான செயலைக் காட்டும் விரிவான ஆவணங்களை கொடுத்துள்ளோம். யாத்திரைக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ஒரு ஓவியப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஒரு 15 நிமிடம் கலந்து கொள்ள சென்றிருந்தார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். தாய், தந்தை குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் ராகுல் காந்தியுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒன்றும் சட்டவிரோதம் இல்லை என்று" தெரிவித்தார். மேலும் பாஜக -ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் ஒருவர் தலைமை பொறுப்பில் இருக்கும் என்சிபிசிஆர்- ன் இந்த புகாரில் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டினார்.

குற்றச்சாட்டு குறித்து என்சிபிசிஆர் தலைவர் பிரியன்ங் கானுங்கோ தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் பொய் சொல்கிறது. அக்கட்சி, 7-17 வயது வரையிலான குழந்தைகளை குறிவைத்து "ஜவஹர் பால மஞ்ச்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதை மறைக்கிறது. 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு அரசியல் கட்சிகள் உகந்தது இல்லை என்பதால் இது மிகவும் தவறானது. என்று தெரிவித்துள்ளார், மேலும் ஆக.30ம் தேதியுடைய "ஜவஹர் பால மஞ்ச்"-ன் ட்விட்டரை மேற்கோள்காட்டி, அதில் 150 நாள் யாத்திரையில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், காங்கிரஸ் கட்சி இதனை சட்டத்தின்படி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது சட்டப்பிரிவு 5 ன் படி விதிமீறிலாகும். இந்த விவகாரம் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் நடைமுறைக்கு கீழ்வருவதால், அது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை அங்கீகரிப்பதும் கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் வேலை என்பாதல் இந்தவிவகாரம் தேர்தல் ஆணையத்தின் முன் எழுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x