Published : 08 Oct 2022 03:31 PM
Last Updated : 08 Oct 2022 03:31 PM

“எந்த மாநில முதல்வராலும் தொழில் வாய்ப்புகளை மறுக்க முடியாது” - அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி விளக்கம்

ராகுல் காந்தி

பெங்களூரு: "எந்த மாநில முதல்வராலும் ஒரு தொழில் வாய்ப்பை மறுக்க முடியாது. ஒரு முதல்வராக அப்படியான வாய்ப்புகளை மறுப்பது முறையும் கிடையாது” என்று ராஜஸ்தானில் அதானி ரூ.60,000 கோடி முதலீடு செய்ய முன்வந்திருப்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். மேலும், “நான் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவன் இல்லை; இந்திய தொழில் துறையின் ஒற்றைமயமாக்கலைத்தான் எதிர்க்கிறேன்” என்றார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்.7-ம் தேதி தமிழகத்தில் தொடங்கிய யாத்திரை தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, ராஜஸ்தானில் நேற்று நடந்த விழாவில் அம்மாநில முதல்வர், அம்பானியை புகழ்ந்தது குறித்து கேட்கப்பட்டது. யாத்திரை குறித்த கேள்வி மட்டும் கேட்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூற, ராகுல் காந்தி அவரை இடைமறித்து முக்கியமான இந்தக் கேள்விக்கு தான் பதிலளிப்பதாக தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் பதில் அளிப்பதாகச் சொல்லி அவர் கூறியது: “அதானி ராஜஸ்தானில் ரூ.60,000 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்திருக்கிறார். எந்த மாநில முதல்வராலும் அப்படி ஒரு வாய்ப்பை மறுக்க முடியாது. ஒரு முதல்வராக அப்படியான வாய்ப்புகளை மறுப்பது முறையும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன். நாட்டிலுள்ள அனைத்து வணிக வாய்ப்புகளும் 2, 3 அல்லது 4 பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கி வணிகத்தை ஒற்றைமயமாக்க அரசியல் ரீதியாக உதவுவதையே நான் எதிர்கிறேன்.

நான் கார்ப்பரேட்டுகளுக்கோ, வணிகர்களுக்கோ எதிரானவன் இல்லை. நான் எதிர்ப்பது நாட்டை பலவீனப்படுத்தும் அனைத்து வணிக ஒற்றைமயாக்கலைத்தான். இன்று அனைத்து வணிகங்களிலும் அதுதான் நடக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அதுதான் நான் எழுப்பும் பிரச்சினை. ராஜஸ்தானில் அதானி வாய்ப்புகளைப் பெற அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் அப்படிச் செய்யும்போது, நான் அவர்களுக்கு எதிராக இருப்பேன்" என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.

ராகுல் காந்தி தனது கூட்டங்களில் ‘மோடி அரசு அம்பானி, அதானி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது’ என்று விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்பூரில் ராஜஸ்தான் முதலீடு மாநாடு 2022 நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அதானி, அவரது குழுமம் மாநிலத்தில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார். விழாவில் பேசிய மாநில முதல்வர் அசோக் கெலாட், அம்பானி ஜி என்று பேசி அவரைப் புகழ்ந்ததும், அவருடன் நெருக்கமாக இருந்ததும் பாஜகவினரால் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x