Published : 05 Oct 2022 01:07 PM
Last Updated : 05 Oct 2022 01:07 PM

சிவசேனா Vs சிவசேனா: மும்பையில் தசரா பேரணி மூலம் வலிமையைக் காட்ட இரு அணிகளும் தீவிரம்

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பேரணிக்காக சிவாஜி பார்க்கில் நடைபெறும் ஏற்பாடுகள்

மும்பை: சிவசேனா கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, கட்சித் தொடங்கப்பட்டு 56 ஆண்டுகளில் முதல் முறையாக சிவசேனா பெயரில் புதன்கிழமை இரண்டு தசரா பேரணிகள் நடத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் உத்தரவ் தாக்கரே, இந்நாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இரண்டு அணிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சிவசேனா கட்சி சார்பில் முப்பையில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அக்கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

இந்த நிலையில், சிவசேனா சார்பில் நடைபெறும் தசரா பேரணிக்காக இரண்டு அணிகளும் நீதிமன்றம் வரையில் சென்று மோதிக்கொண்டன. இதன் விளைவாக சிவசேனா பெயரில் முதல்முறையாக இரண்டு தசரா பேரணிகள் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா கட்சி வழக்கமாக பேரணி நடத்தும் சிவாஜி பார்க்கில் வைத்தும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்திலும் பேரணி நடத்துகின்றன. இந்தப் பேரணிகள் மூலம் தங்களின் பலத்தை நிரூபிக்க இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தப் பேரணிகளுக்காக அரசுப் பேருந்துகள், சிறிய சுற்றுலாப் பேருந்துகள், கார்கள் என 5,000-க்கும் அதிகமான வாகனங்களும், ஒரு சிறப்பு ரயிலும் இரண்டு சிவசேனா அணி ஆதரவாளர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை போலீசார் சிவாஜி பார்க் பகுதியிலும், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து மும்பையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டு பேரணிகளின் காரணமாக 3,200 அதிகாரிகள், 15,200 காவலர்கள், மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1,500 பேர், ஹோம் கார்டு ஜவான்கள் 1000 பேர், 20 அதிவிரைவு படை, 15 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில், மும்பை போக்குவரத்து பிரிவினைச் சேர்ந்த 5-6 டிசிபிகளும், 15 -16 ஏசிபிகளும் பணியில் உள்ளனர்" என்றார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி பேரணிக்காக, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி நீள வாள்
​​​​


தாங்கள்தான் உண்மையான சிவசேனா, பால் தாக்கரேவின் கொள்கைகளை தாங்களே முன்னெடுத்துச் செல்கின்றோம் என்று இரண்டு அணியினரும் கூறிவரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த இரண்டு தசரா பேரணி மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது.

இரண்டு அணிகளுமே தங்களின் பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் வருவார்கள் என்று கூறிவருகின்றனர். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதுவரை சிவசேனா பேரணியில் பங்கற்று மட்டும் வந்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே முதல் முறையாக தசரா பேரணியில் உரையாற்ற இருக்கிறார் என்று மூத்த சிவசேனா நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொருபுரம், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மேடை அருகே 51 அடி நீளத்தில் வாளின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x