Published : 26 Sep 2022 05:16 PM
Last Updated : 26 Sep 2022 05:16 PM

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக போராட்டம்

கோப்புப் படம்

கோழிக்கோடு: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு எதிராக கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என அறிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு அங்கு போராட்டம் வெடித்தது. பள்ளி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹிஜாப் அத்தியாவசிய மத வழக்கம் அல்ல என கூறி, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய கலாசாரம் என்பதால் அதனை அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பள்ளி வாகனத்திலோ, பள்ளி வளாகத்திலோ ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படவில்லை என்றும், வகுப்பறையில் மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவைப் போன்றே கேரளாவிலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து, பள்ளி நிர்வாகம் அதற்கு தடை விதித்தது. ஹிஜாப் சீருடையின் ஒரு பகுதி அல்ல என கூறி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறையிடம் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார் அளித்தனர். பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்காததை அடுத்து, அந்த பெண், அந்த பள்ளியில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து, அந்தப் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பள்ளிக்கு முன் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் ஹிஜாப் விவகாரம் வெடித்திருப்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x