Published : 20 Sep 2022 11:16 AM
Last Updated : 20 Sep 2022 11:16 AM

அசோக் கெலாட் vs சசி தரூர் | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நடுநிலை: சோனியா தகவல்

சோனியா காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உள்கட்சித் தேர்தல் நல்லது என்றும், அந்தத் தேர்தலில் தாம் நடுநிலை வகிக்கப்போவதாகவும் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெற உள்ள கட்சி தலைவருக்கான தேர்தலில், அசோக் கெலாடுக்கும் சசி தரூருக்கும் இடையில் போட்டி நிலவலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சோனியாகாந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பது குறித்து சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாகவும், இந்த முழு தேர்தல் நடைமுறையின் போதும் அவர் நடுநிலை வகிக்கப்போவதாகவும், இந்த தேர்தல் கட்சியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, அதனை வலுபடுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற இருத்கிறது. தேர்தல் முடியவுகள் 19- ம் தேதி அறிவிக்கப்படும். தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செப்.24-ம் தேதி தொடங்கி செப்.30-ம் தேதி முடிவடைகிறது.

அசோக் கெலாட் vs சசி தரூர்

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் ராகுல் காந்தி போட்டியிட மறுக்கும் பட்சத்தில், அந்த பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்-ன் பெயர் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதகவும் அவரும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று திங்கள் கிழமை தகவல்கள் வெளியாகின.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையைாக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிக்க இருக்கிறார். உடல்நிலை காரணமாக கட்சியை தொடர்ந்து வழிநடத்த முடியாத நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட சோனியா காந்தி ஆர்வம் காட்ட வில்லை. ராகுல் காந்தியை தலைவராக்க பலர் முயற்சித்து வரும் நிலையில், அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் கெலாட், சசிதரூர் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான அசோக் கெலாட் தான் போட்டியிடுவதைக் காட்டிலும், ராகுல் காந்தியை போட்டியிட வைக்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் திங்கள்கிழமை கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் கோரிக்கைக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்ளுக்கு வேண்டுகோள்விடுக்கும் வகையில், கட்சியின் கொள்கை, சமூக நீதி, அமைப்பு ரீதியிலான சீர்திருத்தம், பொருளாதார அணுகுமுறை ஆகியவற்றில் புதிய தலைவர்கள் என்ன செய்யவேண்டும் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த சசி தரூர், தான் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் 650 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்த சோனியா காந்தியை சசி தரூர் நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான சீர் திருத்தம் தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 கூட்டமைப்பின் தலைவர்களில் சசி தரூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x