Last Updated : 11 Nov, 2016 09:47 AM

 

Published : 11 Nov 2016 09:47 AM
Last Updated : 11 Nov 2016 09:47 AM

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு தீவிரவாத செயல்களுக்கான நிதியுதவியை கடுமையாக தடுக்கும்

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குக் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் நம் நாட்டில் கள்ள நோட்டுகள் எந்த அளவு புழக்கத்தில் உள்ளது என்பதை அறுதியிட்டு கூறமுடியாத நிலையே உள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தா வில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் 2015-ல் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு, நம் நாட்டில் எந்நேரமும் ரூ.400 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறியது. இது இந்த ஆண்டின் மொத்த பட்ஜெட் தொகையான 19.7 லட்சம் கோடியில் 0.025 சதவீதம் ஆகும்.

நாட்டின் பல்வேறு அமைப்புகள் தாங்கள் பறிமுதல் செய்த கள்ள நோட்டுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுட்டுள்ளன. தேசிய குற்றப்பதிவு மையம் (என்சிஆர்பி) அளித்துள்ள புள்ளிவிவரப்படி, 2015-ல் நாட்டின் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகள் பறிமுதல் செய்த ஆயிரம் ரூபாய் நோட்டு களில் 1,78,022 கள்ள நோட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.17.8 கோடியாகும். பறிமுதல் செய்யப் பட்டால் மட்டுமே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளை நம்மால் கணக்கிட முடிகிறது. இதுபோல் அதே ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் 2,99,524 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.70 கோடி கள்ள நோட்டு கள் புழக்கத்தில் விடப்படுவதாக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சார்பில் கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் மிகவும் கட்டுப்படும் என்று அவர்கள் எதிர்பாக்கின்றனர்.

இதுகுறித்து என்ஐஏ ஐஜி அலோக் மிட்டல் கூறும்போது, “கள்ள நோட்டுகளை அவை வங்கி அமைப்புக்குள் நுழைந்தால் மட்டுமே நம்மால் கண்டுபிடிக்க முடியும். வெளிச்சந்தையில் இவை புழக்கத்தில் விடப்பட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பது சிரமம். கடந்த 2 ஆண்டுகளில் கள்ள நோட்டுகள் தொடர்பாக நாங்கள் 25 வழக்குகள் பதிவு செய் துள்ளோம். 3 வழக்குகளில் 26 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும் போது, “கள்ள நோட்டு குறித்த 90 சதவீத வழக்குகளில் இப்பணம் வங்கதேசத்தில் இருந்தே இந்தியா வுக்குள் புழக்கத்தில் விடப்படு கிறது. இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு, வங்கதேசம் கொண்டுசெல்லப்படு கின்றன. பிறகு ஒரு கும்பல் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் செலுத்துகிறது” என்றார்.

மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளை எவ்வாறு தடுக்கும் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “2000 ரூபாய் நோட்டில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பாகிஸ்தானோ அல்லது வேறு அமைப்புகளோ பயன்படுத்த முடியாது என்றே நம்புகிறோம். இது அனுமானம் மட்டுமே. 500, 1000 ரூபாய் நோட்டுகளில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பாகிஸ்தானால் பயன்படுத்த முடிந்தது என்பது உண்மை. பணம் அச்சிடுவதற்கான தாள், மை, வெள்ளி இழை ஆகியவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களே பாகிஸ்தானுக்கும் சப்ளை செய்கின்றன. எனவே இவை உற்பத்தி செய்யப்படும் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் இவற்றைப் பாகிஸ்தானுக்கு சப்ளை செய்ய வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி) முன்னாள் தலைவர் டி.சி.பதக் கூறும்போது, “கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக குறிப் பிட்ட நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் இந்த நடை முறை, தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, கள்ள நோட்டுப் புழக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வை ஏற்படுத்தும். தீவிரவாத செயல்களுக்கான நிதியுதவியின் பின்னால் சட்டவிரோத பணம் உள்ளது. தீவிரவாதிகளிடம் இவற்றை கொண்டு சேர்க்கும் வழியாகவே கள்ள நோட்டுப் பரிமாற்றமும் செய்யப்படுகிறது” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும் போது, “ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகளை பெற்று, ஹவாலா முறையில் காஷ்மீருக்கு அனுப்பு கின்றன. தற்போது இருப்பில் உள்ள பணம் வெறும் காகிதம் ஆகிவிட்டன. இதனால் தீவிரவாத செயல்களுக்கான நிதியுதவி பாதிக்கத் தொடங்கும்” என்றார்.

‘சென்டர் பார் ஏர் பவர் ஸ்டடீஸ்’ அமைப்பின் ஜெயதேவா ராணடே கூறும்போது, “இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை அனுப்பும் பாகிஸ்தான் மற்றும் வஹாபி குழுக்களுக்கு தற்போது மிகப் பெரிய அடி விழுந்துள்ளது. இவை தங்களின் இந்த நடவடிக்கையை நிறுத்திவிடும் என்று சொல்வதற் கில்லை. என்றாலும் அவை தங்களின் நடவடிக்கையை தொடர சிறிது காலம் பிடிக்கும். மத்திய அரசின் நடவடிக்கை சிறந்த முயற்சியாகும். கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த பலரிடம் இந்த நோட்டுகள் உள்ளன. அவர்களுக்கு மிகப் பெரிய அடி விழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு கள்ள நோட்டுப் பிரச்சினையில் இருந்து நாம் விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்” என்றார்.

வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் வெளியுறவு அமைச்சக செயலாளர் (மேற்கு) சுஜாதா மேத்தா பேசும்போது, “அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்குத் தீவிரவாதம் மிகப் பெரிய தடையாக உள்ளது. தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு, கள்ள நோட்டுகள் மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை தடுக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x