Published : 08 Sep 2022 09:40 PM
Last Updated : 08 Sep 2022 09:40 PM

புத்தகங்கள், உரைகள் இரண்டும் நமது கல்வி போதனையின் அடிப்படை கூறுகள் - பிரதமர் மோடி

புதுடெல்லி: “நமது தகவலுக்கான முக்கிய ஆதாரமாக தொழில்நுட்பம் திகழ்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் புத்தகங்களுக்கும், புத்தகங்களை படிப்பதற்கும் இது மாற்று வழியல்ல” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நவபாரத் சாகித்ய கோவில் ஏற்பாடு செய்திருந்த 'கல்மனோ கார்னிவல்' எனும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த கல்மனோ கார்னிவெல் எனும் புத்தகக் கண்காட்சி என்பது இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழி புத்தகங்களின் பெரிய சங்கமமாக அமைந்துள்ளது. நான் தாம் குஜராத் முதல்வராக இருந்த போது, வன்சே குஜராத் இயக்கத்தை மாநில அரசு தொடங்கியது. தற்போது புத்தகக் கண்காட்சி போன்ற இயக்கங்கள் மட்டுமே, குஜராத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. புத்தகங்கள் மற்றும் உரைகள் ஆகிய இரண்டும் நமது கல்வி போதனையின் அடிப்படைக் கூறுகள்.

வதோதரா மகாராஜா சாயிஜிராவ் கெய்க்வார்டு தமது பகுதியிலிருந்த அனைத்துக் கிராமங்களிலும் நூலகங்களை உருவாக்கினார். கோண்டாலின் மகாராஜா பகவத் சிங் பகவத் கோ மண்டல் என்றழைக்கப்படும் பெரிய அகராதியை அளித்தார். அவருடைய ஆஸ்தான கவிஞர் நர்மத், நர்ம் கோஷி எனும் குஜராத்தி மொழி அகராதியை எழுதினார். புத்தகங்கள், ஆசிரியர்கள், இலக்கிய உருவாக்கம் ஆகியவற்றில் குஜராத் வரலாற்று சிறப்புடையது. இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் குஜராத்தின் இளைஞர்கள் உட்பட ஒவ்வொரு பகுதி மக்களையும் சென்றடைய விரும்புகிறேன். இதன் மூலம் பாரம்பரிய வரலாறு பற்றி அவர்கள் அறிந்துகொண்டு ஊக்கமடைய வாய்ப்பு ஏற்படும்.

அமிர்தப் பெருவிழாவின் போது புத்தகக் கண்காட்சி நடைபெறுவது, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. நமது சுதந்திரப் போராட்டத்தை மீண்டும் நினைவு கூர்வது அமிர்தப் பெருவிழாவின் முக்கிய பகுதி. சுதந்திரப் போராட்டத்தின் மறக்கப்பட்ட அத்தியாயங்களை நம் நாட்டிற்கு வழங்கி வருகிறோம். புத்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள், நாட்டின் இந்த இயக்கத்திற்கு உத்வேகத்தை அளிக்க முடியும். சுதந்திரப் போராட்டம் தொடர்பான புத்தக்கங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட வேண்டும், அந்த எழுத்தாளர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரவேண்டும். இந்த திசையில், நேர்மறையான போக்கை ஏற்படுத்துவதற்கு இந்த நிகழ்வு நிரூபிக்கும்.

ஒருவர் செயல்திறன் மிக்கவராக திகழவும், பயனுள்ள நபராக விளங்கவும் வேதங்கள், உரைகள் மற்றும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இணையதளத்தின் உதவியை மக்கள் நாடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இதுவும் மிகவும் முக்கியமானது. நமது தகவலுக்கான முக்கிய ஆதாரமாக தொழில்நுட்பம் திகழ்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, ஆனால் புத்தகங்களுக்கும், புத்தகங்களை படிப்பதற்கும் இது மாற்று வழியல்ல. நமது மனதில் கருத்துரு உள்ள போது அதை ஆழமாக பதிவு செய்ய மூளை வேலை செய்து புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது என்றும், புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வழிவகைகளை உருவாக்குகிறது. இவற்றில் நம்முடைய சிறந்த நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன.

குறிப்பாக, மாறிவரும் உலகச் சூழலில் புத்தகம் படிக்கும் பழக்கம், மிகவும் முக்கியமானது. புத்தகங்கள் நேரடியாகவோ அல்லது மின்னணு வகையிலோ இருந்தாலும் அதைப் படிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள், இளைஞர்களிடையே புத்தகம் குறித்த தேவையான ஈடுபாட்டை உருவாக்கும் என்றும் அவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x