Published : 06 Sep 2022 06:54 AM
Last Updated : 06 Sep 2022 06:54 AM

பிரதமர் மோடியின் கொள்கைகளால் 8 ஆண்டில் அசுர வளர்ச்சி: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் புகழாரம்

அனுராக் சிங் தாக்குர்.

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கொள்கைகளால் 8 ஆண்டில் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75-வது அமிர்த பெருவிழா ஆண்டில் இந்தியா, பிரிட்டனை விஞ்சி உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பிரிட்டன் போராடும் நேரத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை இடைவிடாமல் விமர்சித்து வரும் பொருளாதார வல்லுநர்கள் பிரிட்டனின் பெரும் துயரங்களை உண்மையில் முன்கூட்டியே அறியத் தவறிவிட்டதால் தற்போது திணறுகிறார்கள்.

பிரிட்டனை விஞ்சி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது என்ற செய்தியை முதன் முதலில் ப்ளூம்பெர்க் வெளியிட்டது. கிரேட் பிரிட்டன் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது சுருங்கியுள்ள பிரிட்டனின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. இந்த நாடு முதல் ஐந்து பொருளாதாரங்களின் பட்டியலில் தனது இடத்தை உறுதியாகப் பிடித்திருந்தது.

காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்டு, காயப்பட்டு, ரத்தம் சிந்திய ஒரு நாடு, இழந்த பொருளாதாரச் செழிப்பு மற்றும் செல்வாக்கை எவ்வாறு சீராக மீட்டெடுத்து உயர்ந்தது என்பதை புளூம்பெர்க் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவமானது இந்த நாட்டில் பொருளாதாரச் சுரண்டலை மேற்கொண்டது. கி.பி.1700-ல் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.4 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1947 ஆகஸ்ட் 15-ல் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது, 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இந்தியா மேலும் வறுமையில் தள்ளப்பட்டபோது பிரிட்டன் முன்னேறியது.

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை பதிவு செய்யவும், தேசியப் பொருளாதாரத்தை உயர்நிலையில் வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, பெரிய கொள்கை மாற்றங்களைச் செய்ததை புரிந்து கொள்ள இந்தப் புள்ளி விவரத்தை நினைவுபடுத்துவது அவசியம்.

வளமான எதிர்கால வடிவமைப்பு

2014-ல், பிரதமர் மோடி கடந்த காலத்தை புறம்தள்ளி , இந்தியர்களின் பல ஏமாற்றங்களை ஈடு செய்து, அவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து, இந்த மாபெரும் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஒரு வளமான எதிர்காலத்தைத் தொடங்கினார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த நிலையான மாற்றங்களின் தாக்கத்தை இந்த எட்டு ஆண்டுகள் கண்டன. இடைவெளி நிரப்பும் வேகம் அதிகரிக்கும்

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 13.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வாங்கும் சக்தி அதிகரித்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

கணிப்புகளின்படி மற்றவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தேக்கமடையும் அல்லது குறையும் போது, இந்தியாவின் மதிப்பு தொடர்ந்து உயரும். அதாவது இந்தியா தனது முன்னிலையை தக்கவைத்து, தற்போதுள்ள இடைவெளிகளை நிரப்பும் வேகத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்றிய பிரதமர்

இரண்டு ஆண்டுகளாக கரோனாவின் தாக்கமானது உலகப் பொருளாதாரங்களைப் போலவே இந்திய பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இந்த நெருக்கடிகளை பிரதமர் மோடி வாய்ப்புகளாக மாற்றினார். அவரது தொலைநோக்கு பார்வை இந்தியா பிறர் வழியில் செல்வதைத் தடுத்தது. அதற்கு மாற்றாக, அவர் ஒரு எச்சரிக்கையான மற்றும்விவேகமான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினங்களை இலக்காகக் கொண்டு அவர் செயல்பட்டார்.

தொழில்துறை ஊக்குவிப்பு

தொழில் துறைக்கான ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டங்களை பிரதமர் மோடி ஊக்குவித்தார். ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் பலன்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குள்ள ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச ரேஷன் பொருள்களைப் பெறும் உலகின் மிகப்பெரிய இலவச உணவுத் திட்டம், உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரம் தொற்றுநோயின் அழிவுகளிலிருந்து வேகமாக மீண்டு வருவதற்கு பெரிதும் உதவியது.

சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்குள் நுழையும் போது, நாம் முன்பை விட இன்னும் வலுவாகவும் வளமாகவும் முன்நிற்போம்.

உலகிற்கே உணவளிக்கும் இந்தியா

இன்றைய இந்தியா இணைய பயனாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று நுகர்வோர் சந்தையிலும் வலுவான இடம்பிடித்துள்ளது. நாம் இப்போது உலகளாவிய வர்த்தகத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக இருக்கிறோம்.

நம் முந்தைய ஏற்றுமதி சாதனைகளை முறியடித்து, இந்த ஆண்டு ரூ.50 லட்சம் கோடியைத் தொட்டுள்ளோம். நமது பொருள்களின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஒரு காலத்தில் பிறரின் கருணையில் வாழ்ந்த நாடு, இன்று உலகிற்கே உணவை ஏற்றுமதி செய்யும் நாடாக திகழ்கிறது.

அயராத தலைமை; டிஜிட்டல் புரட்சி

மோடி அரசின் வெற்றிக் கதைகளின் பட்டியல் நீளமானது. ஒவ்வொரு மாதமும் 100 பில்லியன் டாலர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு புதிய நிறுவனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதையடுத்து, கடந்த எட்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களின் மதிப்பீடு ரூ.12 லட்சம் கோடியை கடந்துள்ளது.

பிரதமர் மோடியின் அயராத தலைமையின் கீழ், இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில நூறு என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது70,000-ஆக வளர்ந்துள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 50 சதவீதம் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளன. இந்த வெற்றி பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியா புரட்சியால் விளைந்தவை.

2014-ல், இந்தியாவில் 6.5 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் இருந்தனர்; இன்று, 78 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

ஜிஎஸ்டியின் அறிமுகம் தொழில்முனைவோருக்கு அதிக பயனளிப்பதாக மாறியுள்ள அதே நேரத்தில் வரி வசூலில் உள்ள இடைவெளிகளையும் சரிசெய்துள்ளது.

வளரும் இந்தியா என்பது கண்ணாடி மால்களில் மட்டும் அல்ல என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, வறுமையைக் குறைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அதன் பலனாக நுகர்வு சமத்துவமின்மை எவ்வாறு வெகுவாக குறைந்துள்ளது என்பதை சமீபத்திய ஐஎம்எப் ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. இவைதவிர, ஏழைகளுக்கான வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ஆகிய சமூக மேம்பாட்டுக் குறியீடுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

"ஒரே பாரதம் - உன்னத பாரதம்"

பின்தங்கியவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது முதல் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாயில் குடிநீரை கொண்டு சேர்ப்பது வரை பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முத்ரா கடன் மற்றும் பிற தொடர்புடைய கடன் திட்டங்கள் சிறு தொழில்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புக்கும், சுயவேலை வாய்ப்புக்கும் உந்துதலைக் கொடுத்துள்ளன.

பிரதமர் மோடியின் ‘‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’’ திட்டம் சீராக வடிவம் பெற்றுள்ளது. இதுஅரசையும் மக்களையும் உள்ளடக்கிய ஒருபார்வை - கூட்டு முயற்சி. இந்தியா தற்சார்பு சவால்களை சந்திக்கவும், துன்பங்களை சமாளிக்கவும் தன்னம்பிக்கையுடன் தயாராக உள்ளது.

நம்பிக்கை பயணம்

உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற இரட்டை மைல்கற்களை கடப்பது இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான சாதனை என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கட்டத்தில் இருந்து 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைவதற்கான பாதையில் நமது பயணத்தைத் தொடங்குகிறோம்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா இந்த மைல்கல்லையும் கடக்கும் என்று இப்போது நம்பிக்கையுடன் கூறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x