Published : 03 Sep 2022 06:15 AM
Last Updated : 03 Sep 2022 06:15 AM

நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த காஸ் லாரி - சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அச்சத்தில் உறைந்த மக்கள்

ஓங்கோல் அருகே தீப்பற்றி எரிந்த காஸ் சிலிண்டர் லாரி.

ஓங்கோல்: ஆந்திர மாநிலத்தில் சமையல் காஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரி நள்ளிரவில் தீப்பற்றியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

ஆந்திர மாநிலம், கர்னூலில் இருந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் காஸ் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நெல்லூர் மாவட்டத்தின் உலவபாடு பகுதிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. இந்த லாரியில் சுமார் 300 சிலிண்டர்கள் இருந்தன. இந்த லாரி குண்டூர் - அனந்தபூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பிரகாசம் மாவட்டம், தத்தவாடா கிராமம் அருகே வந்தபோது லாரியின் கேபினில் திடீரென தீப்பற்றியது.

இதைக்கண்ட ஓட்டுநர் மோகன் ராஜு உடனடியாக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அத்துடன் சாலையின் இரு பக்கமும் ஓடிச் சென்று அந்த வழியாக வரும் மற்ற வாகனங்களை தூரத்திலேயே தடுத்து நிறுத்தினார்.

தீப்பற்றிய லாரிக்கு அருகில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தகவல் அறிந்து அவர்களும் வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

தகவலின் பேரில் போலீஸாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் லாரியில் தீ முழுவதுமாக பரவத் தொடங்கி, ஒவ்வொரு சிலிண்டராக வெடிக்கத் தொடங்கியது.

லாரியை நெருங்க முடியாததால் தீயணைப்பு படையினர் சுமார் 200 அடி தூரத்தில் இருந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் காஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் நாலாபுறமும் வெடித்து சிதறியதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

லாரி முற்றிலும் எரிந்து கருகியது. அதிர்ஷ்டவசமாக வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. பிறகு தீ அணைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x