Published : 27 Aug 2022 10:37 AM
Last Updated : 27 Aug 2022 10:37 AM

காங்கிரஸுக்கு வெறும் கைப்பாவை தலைவர் தேவையில்லை: மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான தலைவரே தேவை என்று கூறியுள்ளார் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் நேற்று அறிவித்தார். இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த பிருதிவிராஜ் சவான், "காங்கிரஸ் காரிய கமிட்டியில் வெறும் துதிபாடுவோர்கள் மட்டுமே இருந்தால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவருக்கு அவர்களால் சரியான அறிவுரையை வழங்கமுடியாது. வெத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும்.

தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வெறும் வார்த்தைப் போரால் எதனையும் சாதிக்க முடியாது. குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். அவர் மூத்த தலைவர் என்பதையும் தாண்டி காங்கிரஸ் கட்சியின் மதச்சார்ப்பற்ற தன்மையின் முகமாக இருந்தார். அவர் சிறுபான்மையினத் தலைவரின் அடையாளமாகவும் இருந்தார். நாடு முழுவதும் அவரை மக்கள் அறிவார்கள். அப்படியொரு நபர் கட்சியில் இருந்து விலகியது நிச்சயமாக வருத்தத்திற்கு உரியதுதான்.

கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஒரு கூட்டுறவு இருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதில் பங்கேற்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியை வெறும் 4 பேர் தான் கைக்குள் வைத்த்ள்ளனர். நான் அதைப் பற்றி ஆழமாக விமர்சிக்க விரும்பவில்லை.

இப்போது என்னைப் போன்றோரின் கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. தள்ளிப்போனாலும் கூட தேர்தல் நடந்தால் சரி. ஆனால் மீண்டும் ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. புதிய தலைவர் உண்மையான தலைவராக இருக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். தேர்தல் மூலம் ஒரு நாடாளுமன்ற குழுவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். காரிய கமிட்டி, தேர்தல் குழு எல்லாமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார்.

பிருதிவிராஜ் சவான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கராட் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2004 முதல் 2010 வரை பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்துள்ளார். 2010 முதல் 2014 வரை மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x