Last Updated : 10 Oct, 2016 03:26 PM

 

Published : 10 Oct 2016 03:26 PM
Last Updated : 10 Oct 2016 03:26 PM

உ.பி. ராம்லீலா மேடைகளில் துல்லிய தாக்குதல் பிரச்சாரம்: தீவிரம் காட்டும் பாஜக

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான 'துல்லியத்தாக்குதல்' குறித்து உத்தரப் பிரதேச ராம்லீலா மேடைகளில் பிரச்சாரம் செய்ய உள்ளது பாரதிய ஜனதா. மேலும் நாளை 11-ம் தேதி லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்களை கடந்த 29-ம் தேதி இந்திய ராணுவம் திடீர் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள இத்தாக்குதல் சம்பவத்தை பாஜக தனது அரசியல் பிரச்சார ஆயுதமாக கையிலெடுப்பது பற்றி நிறைய விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில் உ.பி.யில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியின் இறுதிநாளில் (தசரா பண்டிகை நாளில்) இத்தாக்குதல் குறித்து பிரச்சாரம் செய்து மறைமுகமாக வாக்கு சேகரிக்கத்திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விழாவில் முன்னாள் ராணுவத்தினரையும் அழைத்து கவுரவப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உ.பி. தலைநகர் லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேருரை ஆற்ற உள்ளார். ராவணன் கொடும்பாவிக்கு பிரதமர் மோடி இந்த விழாவில் தீ வைக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற விழாவில் நாட்டின் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இதற்காக, லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “தேசியவாதம் என்ற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சிகளால் பாஜகவுக்கு நிச்சயம்பலன் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த தேசபக்தி கூட்டங்களில் அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் கிடைக்கும். இந்த பிரச்சாரத்தை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிராமங்கள் வரை கொண்டு செல்ல கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

உ.பி.யுடன் தேர்தலை சந்திக்கும் உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. உபியின் லக்னோ, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மக்களவை தொகுதி ஆகும். இதன் அருகிலுள்ள வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். இதனால் ‘மாற்றம்’ என்ற பெயரில் உபி.யில் நடத்தப்படவிருக்கும் பிரச்சாரக் கூட்டங்களிலும் துல்லியத்தாக்குதலை பாஜக முன்னிறுத்த உள்ளது. ஏற்கெனவே, துல்லியத் தாக்குதலை குறிப்பிட்டு உ.பி.யில் சுவரொட்டி பிரச்சாரத்தை பாஜக தொடங்கி விட்டது. இதற்கு அங்கு ஆளும் சமாஜ்வாதி, எதிர்கட்சிகளான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளன.

வட இந்தியாவில் நவராத்ரி பண்டிகை ராமர் பெயரில் கொண்டாடப்படுகிறது. பத்து தலை ராவணனனுடன் ராமர் 10 நாள் யுத்தம் நடத்தினார் என்பது இங்குள்ள ஐதீகம். இதை வைத்து நவராத்திரி நாட்களில் ராமாயாணத்தின் யுத்த காண்டத்தை நாடகமாக மேடைகளில் நடத்துகின்றனர். இந்த மேடைகளில் ஒவ்வொரு நாளும் ராவணனின் ஒரு தலையை ராமர் கொய்வதாகக் காட்டப்படும். அஷ்டமியில் 8-வது தலையும் நவமியில் 9-வது தலையும், மறுநாள் கொண்டாடப்படும். தசராவில் 10-வது தலையும் கொய்யப்படுவதாகக் காட்டப்படும்.

இதில் 10-வது தலை கொய்யப்படும்போது ராவணனின் கொடும்பாவியையும் மக்கள் எரித்து மகிழ்கின்றனர். இதற்காக என உ.பி.யின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள்தோறும் ராம்லீலா எனும் பெயரிலும் மைதானமும் உண்டு. அதில் கொடும்பாவி எரிப்பை முக்கிய பிரமுகர்களை அழைத்து விழாவாகக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ராவணன் கொடும்பாவி எரிப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பலரும் கலந்துகொள்வது உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x