Last Updated : 04 Oct, 2016 08:17 AM

 

Published : 04 Oct 2016 08:17 AM
Last Updated : 04 Oct 2016 08:17 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிரான மத்திய அரசு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

மத்திய அரசு திடீர் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திடீரென‌ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ம‌னு இன்று விசாரணைக்கு வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி காவிரி நீரை கர்நாடகா தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். 4-ம் தேதிக்குள் ( இன்று ) காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’’ என கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்த கர்நாடக அரசு தங்கள் தரப்பு நிபுணரின் பெயரை அறிவிக்க முடியாது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவையும் தாக்கல் செய்தது.

இந்நிலையில் மத்திய அரசின் வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோத்கி நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் உடனடியாக இதனை விசாரிக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காவிரி வழக்கில் தொடர்புடைய தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசின் வழக்கறிஞர்களை நீதிமன்ற அறைக்கு வருமாறு அழைத் தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இதனை நாடாளு மன்றத்தின் ஒப்புதலுடன் மட்டுமே அமைக்க முடியும். ஆனால் உச்ச நீதிமன்றம் வரம்புமீறி, உத்தரவிடுவதால் தேவையற்ற சிக்கல் உருவாகிவிடும்.

இதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மனு ஏற்கெனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது. காவிரி நதி நீர் பங்கீட்டை தீர்ப்பதற்காக நாடாளுமன்றம் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கியது. இந்த விவகாரத்தை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. நடுவர் மன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 252 மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான 1956 நதிநீர் பங்கீட்டு சட்டப்பிரிவு 11-ன்படி நாடாளுமன்றம் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க முடியும். காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரையை ஏற்பதா, மறுப்பதா என மத்திய அரசும், நாடாளுமன்றமும்தான் இறுதி முடிவெடுக்க முடியும்.

எனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகையால் கடந்த செப்டம்பர் 20 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்தம் செய்ய வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி

இதற்கு நீதிபதிகள், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 10 நாட்களுக்கு மேலா கிறது. மத்திய அரசு திடீரென இப்போது வந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறதா? மத்திய அரசு சட்டத்தை சரியாக புரிந்து கொண்டிருக் கிறதா? என செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரித்து பார்ப்போம்’’ என்றனர்.

அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது மத்திய அரசின் தவறுதான். சட்டப் பிரிவுகள் குறுக்கிடுவதால் தற்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்’’ என்றார்.

தமிழக அரசு எதிர்ப்பு

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கூடாது. தமிழக அரசின் மனுவை வருகிற 6-ம் தேதி விசாரிக்கும்போதே இதையும் விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி காவிரி நீர் இன்றும் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை’’ என்றார்.

இதற்கு நீதிபதிகள், “கர்நாடகா இன்னும் காவிரி நீரை திறக்கவில்லையா? இதுவரை திறக்கப்பட்ட நீரின் அளவு குறித்த அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யுங்கள்’’ என கர்நாடக அரசின் வழக்கறிஞர் ரகுபதிக்கு உத்தர விட்டனர்.

இன்று விசாரணை

மேலும், “இவ்வழக்கை தாமதப்படுத்தக் கூடாது என்பதால் முன்கூட்டியே விசாரிக்கிறோம்’’ எனக்கூறி வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மோடிக்கு பாராட்டு

இதனிடையே நேற்று நடை பெற்ற கர்நாடக சட்டப்பேரவையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்ட‌ அனைத்துக்கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர்.

அதேபோல காவிரி விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்த குமார், ரமேஷ் ஜிகஜினகி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x