Published : 20 Aug 2022 04:29 AM
Last Updated : 20 Aug 2022 04:29 AM

ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் தமிழகம், ஆந்திரா உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் அந்த மாநிலங்கள் மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்வற்கும், மத்திய மின் சந்தையை நிறுவியுள்ளன.

இந்த சந்தையை கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின்துறை அமைச்சகம் ‘பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்’ (பொசோகோ) என்ற பொதுத்துறை நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளன. இதையடுத்து, இந்த 13 மாநிலங்களும் மின் சந்தையில் மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் பொசோகோ நிறுவனம் தடை விதித்துள்ளது.

மிக அதிகபட்சமாக தெலங்கானா மாநிலம் ரூ.1,380.96 கோடி பாக்கி வைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழகம் ரூ.926.11 கோடி, ராஜஸ்தான் ரூ.500.66 கோடி, ஜம்மு-காஷ்மீர் ரூ.434.81 கோடி, ஆந்திரா ரூ.412.69 கோடி, மகாராஷ்டிரா ரூ.381.66 கோடி, கர்நாடகா ரூ.355.20 கோடி, மத்தியபிரதேசம் ரூ.229.11 கோடி, ஜார்க்கண்ட் ரூ.214.47 கோடி, பிஹார் ரூ.173.50 கோடி, சத்தீஸ்கர் ரூ.27.49 கோடி, மணிப்பூர் ரூ.29.94 கோடி, மிசோரம் ரூ.17.23 கோடி பாக்கி வைத்துள்ளன.

தெலங்கானா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொசோகோ சார்பில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிதிகளின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய மின் துறை விளக்கம் அளித்துள்ளது.

மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மின் துறைமுதன்மைச் செயலாளர் சஞ்சய்துபே கூறும்போது, “நிலுவை தொகையை செலுத்த நடவடிக்கைஎடுத்து வருகிறோம். மாநிலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்புஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தெலங்கானா மின்சார கழகதலைவர் தேவபள்ளி பிரபாகர் ராவ் கூறும்போது, “மின்விநியோகம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மத்திய மின் துறைஅமைச்சகத்துக்கு பதில் அளித்துள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான் மின் துறை மூத்த அதிகாரி கூறும்போது, “ரூ.500 கோடி பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே நாங்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை குறித்து ஆட்சேபம் எழுப்பி உள்ளோம். வெள்ளி, சனி,ஞாயிறு என 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இந்த நேரத்தில் நோட்டீஸ் அனுப்புவது எந்த வகையில் நியாயம்” என்று குற்றம்சாட்டினார்.

பிஹார் தரப்பில் நிலுவை தொகை செலுத்தப்பட்டு விட்டதாக அந்த மாநில மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய மின் துறையின் நடவடிக்கையை எதிர்த்து சில மாநிலங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x