Last Updated : 13 Oct, 2016 01:34 PM

 

Published : 13 Oct 2016 01:34 PM
Last Updated : 13 Oct 2016 01:34 PM

பாக். ராணுவத்தால்தான் அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தலே தவிர தீவிரவாதிகளால் அல்ல: சிவசங்கர்

பாகிஸ்தான் நாட்டின் அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது அந்நாட்டு ராணுவப் படையில் உள்ள சில புல்லுருவிகளே தவிர தீவிரவாதிகள் அல்ல என முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சாய்சஸ்: இன்சைட் தி மேக்கிங் ஆஃப் இண்டியாஸ் ஃபாரின் பாலிசி (Choices: Inside the making of India’s Foreign Policy) என்ற புத்தகத்தை சிவசங்கர் மேனன் எழுதியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருக்கும் பல்வேறு தகவல்களும் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

பாகிஸ்தான அணு ஆயுதங்கள் குறித்து அப்புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என்னைப் பொருத்தவரை பாகிஸ்தான் நாட்டின் அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது அந்நாட்டு ராணுவப் படையில் உள்ள சில புல்லுருவிகளே தவிர தீவிரவாதிகள் அல்ல.

பாகிஸ்தான் அரசின் அனுமதியே இல்லாமல் அணு ஆயுதப்போர் நடத்த அந்நாட்டுப் படைகளின் புல்லுருவிகள் சிலர் தயாராகவே இருக்கின்றனர்.

ஒரு விமானப் படை விமானியோ, ராணுவ பிரிகேடியர் அந்தத் தாக்குதலை எளிதாக நடத்திவிட முடியும். இது அந்நாடு எதிர்கொண்டுள்ள ஓர் ஆபத்தான சூழல். இத்தகைய சூழலில்தான் பாகிஸ்தான் போர்க்களத்தில் தந்திரமாக பயன்படுத்தக்கூடிய சிறிய அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இவற்றை நிச்சயமாக திறன் வாய்ந்த போர் வீரர் அதுவும் உயர் பதவியில் இருப்பவரால் மட்டுமே இயக்க முடியும். தீவிரவாதிகள் எளிய முறையில் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தும் சதிகளை தெரிந்து கொண்டுள்ளனர். எனவே அவர்களால்தான் பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு அச்சுறுத்தல் இல்லை.

மேலும், சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளில் பாகிஸ்தானில் மட்டுமே அவை ராணுவ கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ளன. பிற நாடுகள் அணு ஆயுதங்களை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் இருப்பதற்கு சிறந்த காரணங்கள் இருக்கின்றன.

அணு ஆயுத பலத்தை காட்டி எந்த ஒரு நாடும் அச்சுறுத்தக் கூடாது என்பதற்காகவே இந்தியா அணு ஆயுதங்களை தன் வசம் வைத்துள்ளது. அது முற்றிலும் தேச பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்கப் போவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

அதேவேளையில் பாகிஸ்தான் போர்க்களத்தில் தந்திரமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் இந்தியா விசாலமான அணு ஆயுத தாக்குதலுக்குத் தயங்காது என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x